முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி

புதன்கிழமை, 1 ஜூன் 2016      தமிழகம்
Image Unavailable

புதுச்சேரி  - புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.  நடந்து முடிந்த புதுச்சேரி சட்டப்பேரவைத் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணி 17 இடங்களில் வெற்றிபெற்று பெரும்பான்மை பெற்றுள்ளது. ஆனால், முதல்வர் பதவி யாருக்கு என்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்ததது.  மாநிலத் தலைவர் நமச்சிவாயத்துக்கும், அகிலஇந்திய பொதுச்செயலாளர் நாராயணசாமிக்கும் இடையே முதல்வர் பதவிக்கு கடும்போட்டி நிலவி வந்தது. இதனால், புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி அமைப் பதிலும் தாமதம் ஏற்பட்டது. இதனிடையே காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர்கள் ஷீலா தீட்சித், முகுல்வாஸ்னிக் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அகில இந்திய பொதுச் செயலாளர் நாராயணசாமி புதுச்சேரி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இதனால் முதல்வர் பதவிக்கு நீடித்து வந்த குழப்பம் முடிவுக்கு வந்தது. 

இந்நிலையில் சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவராக (முதல்வராக) தேர்வு செய்யப் பட்டுள்ள நாராயணசாமி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை சந்தித்து புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தை வழங்கினார்.  இதனைத் தொடர்ந்து மாநிலத் தலைவர் நமச்சிவாயத்துடன் டெல்லி சென்ற நாராயணசாமி ராகுல்காந்தியை சந்தித்து அமைச்சர்கள், சட்டசபைத் தலைவர், துணைத் தலைவர், நாடாளுமன்றச் செயலர், அரசு கொறடா ஆகிய பதவிகளுக்கு யாரை நியமிப்பது என்பது குறித்து பட்டியல் ஒன்றை அளித்தார். புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் ஆட்சி அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி தர வேண்டும். அதன்பேரில் துணைநிலை ஆளுநர் பெரும்பான்மை பெற்ற கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பார். 

அதன்படி புதுச்சேரியில் ஆட்சி அமைக்க உரிமை கோரிய காங்கிரஸ் கட்சியின் கடிதத்தை ஜனாதிபதிக்கு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அனுப்பி வைத்தார். இதன் தொடர் நடவடிக்கையாக உள்துறை அமைச்சகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  காங்கிரஸ் ஆட்சி அமைக்க உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ள நிலையில் விரைவில் புதிய அரசு பதவி யேற்பு நடைபெறும் என எதிர் பார்க்கப்படுகிறது. புதிய அரசு பதவியேற்புக்கான ஏற்பாடுகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்