முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ எஸ்.எம்.சீனிவேல் மறைவுக்கு சட்டபேரவையில் இரங்கல் தீர்மானம்

வெள்ளிக்கிழமை, 17 ஜூன் 2016      அரசியல்
Image Unavailable

சென்னை, திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சீனிவேலின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவை வரும் 20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தமிழக சட்டப்பேரவை நேற்று முன்தினம் கூடியது. 15-வது சட்டமன்றக்கூட்டத்தில் கவர்னர் ரோசய்யா உரையாற்றினார். இதைத்தொடர்ந்து நேற்று காலை  கூடிய கூட்டத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருப்பரங்குன்றம் தொகுதியிலிருந்து அ.தி.மு.க. சார்பில் தமிழக சட்டமன்றப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.எம். சீனிவேலின் மறைவு குறித்து சபாநாயகர் இரங்கல் தீர்மானம் கொண்டு வந்தார். 2001 ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரையிலும் சீனிவேலு சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு திறம்பட பணியாற்றினார் என்றும், கடந்த மே 25-ம்தேதி சீனிவேலு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் மறைவுற்ற செய்தி வருத்தமளிப்பதாகவுள்ளது. சாதாரண தொண்டராக இருந்து பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றி, கழகத்திற்கும் கழகத்தின் தலைமைக்கும் அளப்பறிய விசுவாசத்தோடு பணியாற்றிய சீனிவேலின் குடும்பத்தினருக்கு சட்டப்பேரவை சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. சீனிவேலின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், வரும் 20-ம் தேதிக்கு சட்டப்பேரவைக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மணி (பொங்களூர்) ராஜாராம் நாயுடு (தளி), செல்வராஜ் (உடுமலை), பழனிச்சாமி (கிணத்துக்கடவு), நாச்சிமுத்து கவுண்டர் (ஒட்டன்சத்திரம்)  ஆகிய 5 பேரின் மறைவு குறித்து சபாநாயகர் ப.தனபால் இரங்கல் குறிப்புகள் வாசித்தார். இதனையடுத்து, உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

இதனையடுத்து, சட்டப்பேரவைக் கூட்டம், வரும் 20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம் காலை 10 மணிக்கு, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு, விவாதம் தொடங்குகிறது. 21 மற்றும் 22-ம் தேதிகளில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது தொடர்ந்து விவாதம் நடைபெறும். 23-ம் தேதி கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு, முதல்வர் ஜெயலலிதா, பதிலுரை ஆற்றுகிறார். இதனைத் தொடர்ந்து சட்டமுன்வடிவுகள் நிறைவேற்றப்படவுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்