முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை சிறைகளில் உள்ள 29 தமிழக மீனவர்கள் 94 படகுகளை விடுவிக்க உடனடி நடடிவடிக்கை எடுங்கள் : பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

சனிக்கிழமை, 25 ஜூன் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை  - இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த 5 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது எந்திர படகை விடுவிப்பதுடன், இலங்கை சிறைகளில் உள்ள 29 தமிழக மீனவர்களையும், 94 மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது., நாகப்பட்டினம்  மாவட்டம் விழுந்தமாவடி கடல் பகுதியில் இருந்து 5 மீனவர்கள் ஒரு எந்திர படகில்  கடந்த 21-6-2016 அன்று கடலுக்குள் மீன்  பிடிக்கச்சென்றார்கள். அவர்களை இலங்கை கடற்படை பிடித்துச் சென்றுள்ளது.

அந்த மீனவர்களின் படகு எந்திர கோளாறு காரணமாக இலங்கையின் வல்வெட்டித்துறை பகுதியை நோக்கி ஒதுங்கிய போது, அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருக்கிறார்கள். அவர்களது படகும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. தமிழக மீனவர்களை இலங்கை கைது செய்யும் நடவடிக்கை மனிதத்தன்மையற்றதாக இருக்கிறது.  கடலில் பரிதவித்து துயரத்தில் நின்றவர்களை இலங்கை அரசு கைது செய்துள்ளது.இலங்கை சிறைகளில் ஏற்கனவே  24 தமிழக மீனவர்கள் வைக்கப்பட்டிருப்பதுடன் 93 மீன்பிடி படகுகளையும்  இலங்கை பறிமுதல் செய்து வைத்துள்ளது. தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்காமல் இருக்கும் போக்கை இலங்கை பின்பற்றி வருவதால், தமிழக மீனவர்கள் மிகப்பெரும் புழுக்கத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள்.

இலங்கை பிடித்து வைத்து இருக்கும் தமிழக மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க தாங்கள் இலங்கை அரசின் உயர் மட்ட நிர்வாகத்திற்கு இந்த விவகாரத்தை கொண்டு செல்ல வேண்டும். பாக் ஜலசந்தியில் தங்களது பாரம்பரிய நீர் பகுதியில் அமைதியாக மீன்பிடிக்கும் உரிமை எங்களது மீனவர்களுக்கு மறுக்கப்படுகிறது. இந்தியா - இலங்கை இடையே கடந்த 1974, 1976-ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்து நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை மீட்டெடுக்க வேண்டும் என தமிழக அரசு உறுதியுடன் வலியுறுத்துகிறது. இந்தியா - இலங்கை இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கினை நானும், தமிழக அரசும் மேற்கொண்டுள்ளோம்.

தற்போது பிடிக்கப்பட்டுள்ள 5 தமிழக மீனவர்கள் உள்பட இலங்கை சிறையில் உள்ள 29 மீனவர்கள் மற்றும் 94 மீன்பிடி படகுகளை உடனடியாக விடுவிக்க தாங்கள் தலையிட்டு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். இலங்கை பிடித்து வைத்துள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க தாங்கள் அறிவுறுத்த வேண்டுகிறேன்.இவ்வாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்