முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனந்த நாக் சட்டமன்ற தொகுதி தேர்தலில் ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி வெற்றி

சனிக்கிழமை, 25 ஜூன் 2016      இந்தியா
Image Unavailable

ஶ்ரீநகர்  - அனந்தநாக் சட்டமன்ற தொகுதி தேர்தலில் ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெகபூபா முப்தி மகத்தான வெற்றி பெற்றார். அவரது தந்தை 2014ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 6ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் இந்த தொகுதியில் வென்று இருந்தார். தற்போது  மெகபூபா இரு மடங்கு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். ஜம்மு காஷ்மீரில் முதல்வர் மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சியும்(பி.,டி.பி) பாரதிய ஜனதாவும் கூட்டணி ஆட்சி நடத்துகின்றன. 

பி.டி.பி கட்சியின் நிறுவனரும் மெகபூபாவின் தந்தையுமான முன்னாள் முதல்வர்  முப்தி முகமது சயீத்  கடந்த ஜனவரி மாதம் 7ம்தேதியன்று காலமானார். அவர் மரணமடைந்ததைத்தொடர்ந்து அவர் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்க பட்ட அனந்த் நாக் சட்டமன்ற தொகுதிஇடம்  காலியானது. அந்த தொகுதிக்கு இந்த மாதம் 22ம்தேதியன்று இடைத்தேர்தல் நடைபெற்றது.

இதில் பி.டி.பி கட்சி தலைவரும் ஜம்மு காஷ்மீர் முதல்வருமான மெகபூபா முப்தி போட்டியிட்டார். இந்த தேர்தலின் முடிவு நேற்று வெளியானது. இதில் மெகபூபா மகத்தான வெற்றி பெற்றார். அவர் 12ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்தார்.  இந்த சட்டசபை தொகுதியில் 80ஆயிரம் வாக்காளர்கள் வாக்களிக்கும் உரிமை பெற்றிருந்தார்கள்.அவர்களில் 28ஆயிரத்து 500 பேர் வாக்களித்தனர். வாக்குசதவீதம் 34 என்ற அளவில் பதிவானது. இந்த தேர்தலை பிரிவினை வாதிகள் புறக்கணித்து இருந்தார்கள்.

பதிவான வாக்குகளில்  மெகபூபா 17ஆயிரத்து 701 வாக்குகளை பெற்றிருந்தார் அவரையடுத்து வந்த காங்கிரஸ் வேட்பாளர் ஹிலால் ஷா 5ஆயிரத்து 616 வாக்குகளை மட்டுமே பெற்றார். தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் இப்திகார் மிஸ்கர் 2ஆயிரத்து 811 வாக்குகள் மட்டுமே பெற முடிந்தது. இந்த தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சியும், காங்கிரஸ் கட்சியும் பா.ஜ.கவுக்கு எதிராக பிரச்சாரம் செய்தபோதும், மெகபூபா முப்தி  மகத்தான வெற்றியை பெற்றுள்ளார். நேற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது காங்கிரஸ் எழுப்பிய எதிர்ப்பின் காரணமாக முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை பின்னர் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. 

வாக்குப்பதிவு எந்திரங்கள் உரிய முறையில் சீலிடப்படவில்லை என காங்கிரஸ் வேட்பாளர் ஷா குற்றம் சாட்டியதுடன் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் வாக்கு எண்ணிக்கை இடத்தில்  பதட்டம் காணப்பட்டது. 15 நிமிடங்களுக்கு பின்னர் வாக்கு எண்ணும் பணி மீண்டும் துவங்கியது. காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சியினரின் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை . வாக்குப்பதிவு எந்திரங்கள் உரிய முறையிலேயே சீலிடப்பட்டுள்ளன என்று மாவட்ட கலெக்டர் சையது அபைங்த ரஷீத் தெரிவித்தார்.
அனந்த நாக் தொகுதி பி.டி.பி. கட்சியின் கோட்டையாகும்.

அந்த தொகுதியில்  தொடர்ந்து அந்த கட்சி வெற்றிக்கனியை பறித்து வருகிறது. மெகபூபா  1996ம் ஆண்டு முதல் 4வது முறையாக சட்டமன்ற தேர்தலில் வென்றுள்ளார் .1996ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது பெஜ்பெகரா தொகுதியில் அவர் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றார். அப்போது அவரதுஅரசியல் வாழ்க்கை துவங்கியது. அவர் 2014ம் ஆண்டு அனந்த் நாக் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் அவர் மாநில அரசியலுக்கு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரும்பினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்