முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பணத்தை திருப்பி கேட்டு நிர்வாகிகள் விஜயகாந்துக்கு கடிதம்

திங்கட்கிழமை, 27 ஜூன் 2016      அரசியல்
Image Unavailable

சென்னை, பணத்தை திருப்பி கேட்டு மாவட்ட செயலாளர்கள் கடிதம் அனுப்பியதால் விஜயகாந்த் அவர்களுடன் போனில் பேசி சமரசத்தில் ஈடுபட்டார்.

சட்டசபை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்து போட்டியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சி நிர்வாகிகள் அணி அணியாக விலகினர். அதன் பிறகு நடந்த தேர்தலில் தே.மு.தி.க. ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாததுடன் பெரும்பாலான இடங்களில் டெபாசிட் இழந்தது. தேர்தல் தோல்விக்கு பின்பு கட்சி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். அப்போது தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து நிர்வாகிகள் தெரிவித்த கருத்துக்களை ஏற்க மறுத்ததுடன் கட்சியை கலைத்து விடுவேன் என்றும் விஜயகாந்த் மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்டது.

இதனால் கூட்டத்துக்கு வந்த நிர்வாகிகளும், மாவட்ட செயலாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் நேற்று தே.மு.தி.க.வின் 14 மாவட்ட செயலாளர்கள் விஜயகாந்துக்கு எழுதிய பரபரப்பு கடிதம் வெளியானது. அதில் தேர்தல் கூட்டணி தொடர்பாக கட்சி நிர்வாகிகள் கருத்தை கேட்காமல் உங்கள் மனைவி விருப்பப்படி முடிவு எடுத்தது ஏன்? தேர்தல் நிதியாக வசூலித்த ரூ. 500 கோடி பணம் எங்கே? டிரஸ்ட்டில் உங்கள் குடும்ப உறுப்பினர்களை மட்டுமே வைத்துக் கொண்டது ஏன் என்பன உள்பட பல பரபரப்பு குற்றச்சாட்டுகளை தெரிவித்து இருந்தனர்.

இந்த குற்றச்சாட்டுகள் வெளியானது அறிந்ததும் விஜயகாந்த் அதிர்ச்சி அடைந்தார். உடனே தனக்கு நெருக்கமான நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு குற்றச்சாட்டுகளை தெரிவித்த மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக போனில் பேசி உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். கட்சியில் இப்போதைக்கு குழப்பம் விளைவிக்க வேண்டாம், யார் மனதும் புண்பட்டு இருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன், சூழ்நிலை காரணமாக அப்படி பேசி இருப்பேன், அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம், எனக்கு ஒத்துழைப்பு தாருங்கள் என்று விஜயகாந்த் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும் டிரஸ்ட் தொடர்பான கணக்குகளை தரத் தயார் என்றும் அதை பெரிதுப்படுத்த வேண்டாம். நடந்தவைகளுக்காக மன்னிப்பு கேட்க கூட தயார். கடிதம் எழுதி என்னை காயப்படுத்த வேண்டாம் என்றும் விஜயகாந்த் கேட்டுக்கொண்டதாக தே.மு.தி.க. வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. விஜயகாந்த் சமரசத்தை மாவட்ட செயலாளர்களில் ஒரு சிலர் ஏற்றுக்கொண்டாலும், பெரும்பாலானவர்கள் பதில் ஏதும் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் தே.மு.தி.க. நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்