வினுப்பிரியா தற்கொலை: விரைவில் குற்றவாளி கைது செய்யப்படுவார் சேலம் கலெக்டர் உறுதி

செவ்வாய்க்கிழமை, 28 ஜூன் 2016      தமிழகம்
vinupriya(N)

சேலம்  - வினுப்பிரியா தற்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளி மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் சம்பத் தெரிவித்துள்ளார். வினுப்பிரியா தற்கொலை வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ஃபேஸ்புக்கில் தவறாக சித்தரித்து ஆபாச படம் வெளியானதால் சேலம் மாவட்டம் இளம்பிள்ளையைச் சேர்ந்த வினுப்பிரியா என்ற இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். குற்றவாளியை கைது செய்யும் வரை உடலை வாங்கமாட்டோம் என்று கூறி இரண்டு நாட்களாக பெற்றோரும் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வினுப்பிரியா பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். மேலும், மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனுவும் அளித்தனர். அதில் குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் சம்பத், வினுப்பிரியா தற்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளி மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். வினுப்பிரியா தற்கொலை வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதனிடையே போலீஸார் வருத்தம் தெரிவித்ததை அடுத்து வினுப்பிரியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தங்கள் போராட்டத்தை விலக்கி கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்: