முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொண்டர்களின் ரத்தத்தை உறிஞ்சி விட்டார் விஜயகாந்த்: கட்சியிலிருந்து விலகிய சென்னை மாவட்ட செயலாளர் பேட்டி

வெள்ளிக்கிழமை, 8 ஜூலை 2016      அரசியல்
Image Unavailable

சென்னை, தொண்டர்களின் ரத்தத்தை அட்டைபோல் உறிஞ்சி விட்டார் விஜயகாந்த் என்று கட்சியிலிருந்து விலகிய சென்னை மாவட்ட செயலாளர் ஏ.எம்.காமராஜ் பேட்டியளித்துள்ளார்.

சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. படுதோல்வி அடைந்ததையடுத்து கட்சியின் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளை அழைத்து விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார்.கடந்த மாதம் தொடர்ச்சியாக நடந்த கூட்டத்தில் நிர்வாகிகள் சரமாரி குற்றச்சாட்டுகளை தலைமைக்கு எதிராக எழுப்பினார். தொண்டர்களின் கருத்துக்கு மதிப்பளிக்காமல் கட்சியை கலைக்கவும் தயங்க மாட்டேன் என்று பேசினார்.

இதனால் தே.மு.தி.க.வில் இருந்து மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பொறுப்பில் உள்ளவர்கள் விலகி வருகின்றனர்.சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஏ.எம்.காமராஜ் மற்றும் பகுதி செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் தே.மு.தி.க.வில் இருந்து விலகினர். தே.மு.தி.க.வில் இருந்து திடீரென விலகிய ஏ.எம்.காமராஜ் அளித்த பேட்டி விவரம் வருமாறு:-

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு தொண்டர்கள் பற்றி கவலை இல்லை. தனது குடும்பம் ஒன்றுதான் முக்கியம். மனைவி பிரேமலதா, மகன்கள் நலனுக்காக கட்சியை நடத்தி வருகிறார். தே.மு.தி.க.வில் நாங்கள் அடிமைகளாக இருந்து வந்தோம். எந்த கருத்தையும் சொல்ல முடியாது. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நான் ஒரு சில கருத்துக்களை கூறினேன். பெரும்பான்மை தொண்டர்களின் கருத்துக்களை கேட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டும். அதுதான் கட்சி வளர்ச்சிக்கு நல்லது என்று கூறினேன்.
அன்று முதல் என்னை ஓரம்கட்டும் முயற்சியில் விஜயகாந்த் ஈடுபட்டார்.அதைத் தொடர்ந்து என்னை அவமதிக்கும் நடவடிக்கையில் இறங்கினார்.அவரது கொள்கை, கோட்பாடு பிடித்துதான் இந்த கட்சியில் சேர்ந்து உழைத்தோம். செலவழித்தோம். ஆனால் அது பலன் இல்லாமல் போய் விட்டது.தொண்டர்களின் உழைப்பை ரத்தமாக உறிஞ்சும் அவர் அதில் குடும்ப நலனை மட்டுமே பார்க்கிறார். தொண்டர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கவில்லை.

தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி முடிவுகளை மாற்றி ஆதாயம் தேடுகிறார். இனியும் அந்த கட்சியில் இருந்தால் என் உழைப்பு, பணம் எல்லாம் வீணாக விரயமாகுமே தவிர வேறு எந்த பயனும் கிடைக்க போவதில்லை. அதனால் தே.மு.தி.க.வில் இருந்து வெளியேறி விட்டேன். விரைவில் நல்ல முடிவு எடுத்து அறிவிப்பேன். என்னுடன் ஆயிரக்கணக்கான தே.மு.தி.க. தொண்டர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் கலந்து ஆலோசித்து வேறு கட்சியில் இணைவது பற்றி அறிவிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்