முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசை பட்டியல்: ஆல்ரவுண்டர் தரவரிசையில் அஸ்வின் முதலிடம்

புதன்கிழமை, 13 ஜூலை 2016      விளையாட்டு
Image Unavailable

துபாய்  - சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்தியா தொடர்ந்து 2-வது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் முதலிடத்தில் உள்ளார்.இந்தியாவைத் தொடர்ந்து, 3-வது இடத்தில் உள்ள பாகிஸ்தான் அணி, இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் எதிர்கொள்ள உள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான், 2-1 அல்லது 3-1 என்ற கணக்கில் வென்றால், இந்தியாவைப் பின்னுக்குத்தள்ளி 2-வது இடம் பிடிக்கும் வாய்ப்புள்ளது. டெஸ்ட் தொடரை 3-0, 4-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் வென்றால் தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலியாவை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தைப் பிடிக்கவும் வாய்ப்பு உள்ளது.

எனினும் இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது பாகிஸ்தானுக்கு மிகவும் கடினமான ஒன்று. இங்கிலாந்து அணி பாகிஸ்தானை 2-1 அல்லது 1-0 என்ற கணக்கில் வென்றால் டெஸ்ட் தரவரிசையில் 3-வது இடத்துக்கு முன்னேற முடியும். 2-0 அல்லது 3-1 என்ற கணக்கில் வென்றால் இந்தியாவுடன் 2-வது இடத்தைப் பகிர்ந்து கொள்ள முடியும். அதே நேரத்தில் டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றால் இங்கிலாந்து எளிதாக 2-வது இடத்துக்கு முன்னேறும்.
டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர்கள் யாரும் முதல் 10 இடத்தில் இல்லை. ரஹானே 11-வது இடத்திலும், கேப்டன் விராட் கோஹ்லி 14-வது இடத்திலும் உள்ளனர். ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்திலும், நியூஸிலாந்தின் கேன் வில்லியம்ஸன் 2-வது இடத்திலும், தென்னாப்பிரிக்காவின் ஹஷிம் ஆம்லா 3-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.

ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் முதலிடத்தில் உள்ளார். வங்கதேசத்தின் ஷாகிப் அல் ஹசன் 2-வது இடத்திலும், இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் 3-வது இடத்திலும் உள்ளனர். எனினும், பந்து வீச்சாளர்கள் வரிசையில் அஸ்வின் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். இதில் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன், இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் முறையே முதல் மற்றும் 3-வது இடத்தில் உள்ளனர். இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 6-வது இடத்தில் உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்