முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.5 கோடியே 40 லட்சம் செலவில் 9 சார் கருவூல கட்டிடங்கள் : முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

வெள்ளிக்கிழமை, 22 ஜூலை 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை  - திருப்பூர், தூத்துக்குடி, இராமநாதபுரம், காஞ்சிபுரம், தஞ்சாவூர், திண்டுக்கல் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் 5 கோடியே 39 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 9 சார் கருவூல அலுவலகக் கட்டிடங்களை தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். 

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு.,நிர்வாக வசதிக்காகவும், அரசுக்கு ஏற்படும் தொடர் வாடகை செலவினத்தைத் தவிர்க்கவும், தற்போது மின் ஆளுமை திட்டங்களான தானியங்கி பட்டியல் ஏற்புமுறை மற்றும் மின் ஓய்வூதியம் போன்ற திட்டங்களை செம்மையாக செயல்படுத்திடவும், விலை மதிப்பு மிக்க முத்திரைத் தாட்கள் மற்றும் சேம பாதுகாப்பு பொருட்கள் ஆகியவற்றைப் பாதுகாக்கவும், வாடகை கட்டிடங்களில் இயங்கும் சார் கருவூலங்களுக்கு சொந்தக் கட்டடங்கள் கட்டப்படும் என்று நிதித்துறை மானியக் கோரிக்கையின்போது முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசால் அறிவிக்கப்பட்டு, கடந்த 5 ஆண்டுகளில் 14 கோடியே 42 லட்சம் ரூபாய் செலவில் 25 சார் கருவூல அலுவலகக் கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளத்தில் 3060 சதுர அடி கட்டிட பரப்பளவில், தரை மற்றும் இரண்டு தளங்களுடன், காப்பறை, சாய்தளம், மாற்றுத் திறனாளிகளுக்கான கழிவறை, ஓய்வூதியதாரர்களுக்கான காத்திருப்பு அறை உள்ளிட்ட வசதிகளுடன் 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சார் கருவூல அலுவலகக் கட்டிடத்தை முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

மேலும், தூத்துக்குடி மாவட்டம் - தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டம் - முதுகுளத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம் - தாம்பரம், தஞ்சாவூர் மாவட்டம் - திருவிடைமருதூர், திண்டுக்கல் மாவட்டம் - ஆத்தூர் மற்றும் ஒட்டன்சத்திரம், திருநெல்வேலி மாவட்டம் - திருநெல்வேலி மற்றும் ஆலங்குளம் ஆகிய இடங்களில் 4 கோடியே 87 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 8 சார் கருவூல அலுவலகக் கட்டிடங்கள், என மொத்தம் 5 கோடியே 39 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 9 சார் கருவூல அலுவலகக் கட்டிடங்களை முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், நிதி மற்றும் பணியாளர் நிர்வாகச் சீர்திருத்தத் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் முனைவர் பா.இராம மோகன ராவ், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், கருவூல கணக்குத் துறை இயக்குநர் முனியநாதன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்