முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தமிழகம் வெகுவேக முன்னேற்றம் - மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பாராட்டு

சனிக்கிழமை, 23 ஜூலை 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான  தமிழகம் வெகுவேகமாக முன்னேற்றமடைந்து வருகிறது என்று சென்னையில் நேற்று நடைபெற்ற மெட்ரோ ரயில் திட்ட விழாவில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பாராட்டு தெரிவித்தார்.

வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோ நகர் வரை  மெட்ரோ ரயில் முதல் திட்ட நீட்டிப்புக்கான அடிக்கல் நாட்டு விழாவில் அதற்கான சிறப்பு மலரை வெளியிட்டு மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பேசினார். அப்போது அவர் பேசியதாவது.,

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றொரு மைல் கல்லை எட்டி சாதனையைப் படைத்துள்ளது. வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர்- விம்கோ நகர் வரையிலான 9 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயிலின் முதல் கட்ட பணி நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை முதல்வர் ஜெயலலிதா சந்தித்துப் பேசினேன். அப்போது, மெட்ரோ ரயில் நீட்டிப்புத் திட்டத்துக்கு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். அப்போது, இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்குவதில் எந்தப் பிரச்னையும் இல்லை. எனவே, விரைந்து ஒப்புதல் வழங்கப்படும் என அவரிடம் உறுதி அளித்தேன்.

அதேசமயம், இந்தத் திட்டத்துக்கான ஒப்புதல் வழங்கும் பணிகளை மேற்கொண்டேன். எனது துறையின் மூலமாக, இந்தத் திட்டம் நிதித் துறையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்தத் துறையின் ஒப்புதல் கிடைத்து இறுதியாக மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. இப்போது இந்தத் திட்டத்துக்கு முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் பூமி பூஜை நடைபெறுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தத் திட்டம் குறித்த காலத்துக்குள் நிறைவேற்றப்படும் என நம்புகிறேன்.

அதிக மக்கள் தொகையுடனும், அதிகமான போக்குவரத்து வாகன நெரிசல் மிகுந்த பகுதியாகவும் வடசென்னை பகுதி இருக்கிறது. இதனை மனதில் கொண்டு இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.  இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வரும் போது, ஏழை-நடுத்தர தொழிலாளர்களுக்கு அதிக பயனை அளிக்கும். இந்தத் திட்டத்தால் வடசென்னையில் உள்ள பொதுப் போக்குவரத்து மேம்படுவதுடன், தொழிலாளர்கள் நகரின் மையப் பகுதிகளுக்கு எளிதாகச் சென்று வரவும் வழி ஏற்படும்.

முதல் கட்ட விரிவாக்கத் திட்டமானது, ரூ.3 ஆயிரத்து 70 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 9.051 கிலோமீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் நீட்டிக்கப்படும். அதில், 6.7 கிலோமீட்டர் உயர் வழித் தடமாகவும், மீதமுள்ள கிலோமீட்டர் தூரம் தரைக்குக் கீழும் அமைக்கப்படும். ஏழு ரயில் நிலையங்கள் உருவாக்கப்பட உள்ளன. அதில், ஒன்று தரைக்குக் கீழ் அமைகிறது. ரயில் பெட்டிகளை பராமரிப்பதற்காக திருவொற்றியூர்- விம்கோ நகரில் பராமரிப்புப் பணிமனை அமைக்கப்படுகிறது. சென்னையில் 45 கிலோமீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் சேவை அளிப்பதற்காக, ரூ.14,600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தால், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், சமூக-பொருளாதார நிலையும் உயர்த்தப்பட்டிருக்கிறது.  சென்னையில் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான வழித்தடம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதற்கு பொது மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. மீதமுள்ள 34.9 கிலோமீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.முதல் கட்டத் திட்டத்துக்கான பணிகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விரைந்து மேற்கொள்ளும் என நம்புகிறேன். இதன் மூலம், பொது மக்களுக்கு மிகச் சிறந்த பொதுப் போக்குவரத்து கிடைக்கும்.

முக்கிய நகரங்களில் ரயில்: இந்தியாவில் டெல்லி, குர்ஹான், சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஜெய்பூர், மும்பை ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், சென்னை, ஜெய்ப்பூர், கொல்கத்தா, கொச்சி, மும்பை, அகமதாபாத், நாக்பூர், லக்னோ ஆகிய நகரங்களில் மெட்ரோ கட்டுமானப் பணிகள் நடந்து வருவதுடன், 553 கிலோமீட்டருக்கு ரயில் சேவை வழங்குவதற்கான கருத்துகளும் பரிசீலனையில் உள்ளன.

மெட்ரோ ரயில் சேவை பொது மக்களின் மிகப்பெரிய விருப்பமாக உள்ளது. எனவே, இந்தத் திட்டத்துக்காக மத்திய-மாநில அரசுகள் இணைந்து பணியாற்ற வேண்டும். சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் மந்த நிலை காணப்படுகிறது. இந்தியாவில் பொருளாதார நிலை சீராக சிறப்பாக உள்ளது. அதில், தமிழகம் குறிப்பிடத்தக்க மாநிலமாக இருக்கிறது. மத்திய-மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

இதன்மூலம், இந்தியாவை வளமிக்க, வலிமைமிக்க, உறுதியான நாடாக்க முடியும். மாநிலங்கள் வளமிக்கதாக இல்லாவிட்டால், நாட்டை வளமிக்கதாக மாற்ற முடியாது. இதனாலேயே, மாநில அரசுகளுடன் இணைந்து டீம் இந்தியாவாக பணியாற்ற வேண்டுமென மத்திய அமைச்சர்களாகிய எங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கியுள்ளார். மாநில அரசுகள் எந்தக் கட்சியைச் சேர்ந்ததாக இருந்தாலும், அவற்றையெல்லாம் மறந்து அரசியல் மாச்சர்யங்களைத் துறந்து வளர்ச்சி, வளர்ச்சி, வளர்ச்சி  ஒன்றையே   தாரக மந்திரமாக கொண்டு பணியாற்ற வேண்டுமென பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான அரசின் ஒரே குறிக்கோள் வளர்ச்சி, விரைவான வளர்ச்சி, அனைத்திலும் வளர்ச்சி, சிறந்த நிர்வாகம் என்பதாகும். முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசில் தமிழகம் முன்னேற்றம் பெற்று வருகிறது. நான் நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு மட்டுமல்லாது, வீட்டு வசதி, செய்தி-ஒலிபரப்புத் துறையின் அமைச்சராகவும் உள்ளேன் என்பதை அறிவீர்கள். எனவே, தமிழகத்துக்கு எந்தவகையான உதவிகள் அந்தத் துறையில் இருந்து தேவைப்பட்டாலும் அதைச் செய்து கொடுப்போம். வளர்ச்சி பெற்று வரும் மாநிலங்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்க வேண்டுமென பிரதமர் வலியுறுத்தியுள்ளார். தமிழகம் அதுபோன்று வளர்ச்சி பெற்று வரும் மாநிலமாகும். அதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இப்போது நீட்டிப்புத் திட்டத்தையும் செயல்படுத்த உள்ளது. இந்த நிறுவனத்தின் அதிகாரிகள், தமிழக அரசு நிர்வாகத்துடன் இணைந்து நீட்டிப்புத் திட்டத்தை குறித்த காலத்துக்குள் முடிப்பார்கள் என நம்புகிறேன். இந்தத் திட்டத்தை நானும், முதல்வர் ஜெயலலிதாவும் இணைந்து தொடங்கி வைப்போம்.  இவ்வாறு வெங்கையா நாயுடு பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்