முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலில் விழுந்த விமானத்தை கண்டுபிடிக்க மொரிஷியசில் இருந்து நவீன கப்பல் வருகை

செவ்வாய்க்கிழமை, 26 ஜூலை 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, கடலில் விழுந்த விமானத்தை கண்டுபிடிக்க மொரிஷியசில் இருந்து நவீன கப்பல் புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. நீர்மூழ்கி கப்பல்கள் நேற்று தேடுதல் பணிகள் தொடங்கின.

சென்னையில் இருந்து அந்தமானுக்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்ற ஏ.என். 32 ரக போர் விமானம் புறப்பட்ட 16 நிமிடங்களில் திடீரென மாயமானது. நடுவானில் கோளாறு ஏற்பட்டு அந்த விமானம் சென்னையில் இருந்து கடலில் 150 மைல் தொலைவில் விழுந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அந்த விமானத்தில் இருந்த 29 பேரின் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை.

மாயமான அந்த விமானத்தை தேடும் பணிக்கு “ஆபரேசன் தலாஷ்” என்று பெயரிடப்பட்டுள்ளது. விமானம் 150 மைல் முதல் 200 மைல் தொலைவுக்குட்பட்ட பகுதி வரை கடலுக்குள் விழுந்து மூழ்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுவதால் அந்த பகுதியில் 16 கப்பல்கள் முற்றுகையிட்டு தேடி வருகின்றன.12 விமானங்களும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தற்போது வான் வழி பார்வையில் 60 ஆயிரம் சதுர கடல் பரப்பளவிலும் தரை வழியில் 40 ஆயிரம் சதுர கடல் மைல் பரப்பளவிலும் தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.

காணாமல் போன விமானத்தின் அவசரகால இருப்பிடம் அறியும் கருவியில் இருந்து இதுவரை எந்த சிக்னலும் வரவில்லை. இதனால் கடலுக்கு அடியில் எந்த பகுதியில் விமானம் விழுந்திருக்கும் என்ற துல்லியமான இலக்கு இல்லாமல் தேடும் பணி நடந்து வருகிறது. தற்போது 16 கப்பல்கள் முற்றுகையிட்டு தேடுதல் வேட்டை நடத்தி வரும் கடல் பகுதி சுமார் 3 ஆயிரம் மீட்டர் ஆழமான கடல் பகுதியாகும். எனவே நேற்று 5-வது நாளாக தேடுதல் வேட்டை நடத்தப்பட்டும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதை தென்னிந்திய ராணுவ தளபதி ஜக்பீர்சிங் நேற்று உறுதிப்படுத்தினார். இந்த நிலையில் விமானத்தை தேடும் பணிக்கு இஸ்ரோ மற்றும் தேசிய கடலாய்வு தொழில்நுட்ப நிறுவனத்தின் உதவிகள் பெறப்பட்டுள்ளன. இஸ்ரோ, இன்னும் சாடிலைட் படங்கள் தரவில்லை. ஆனால் தேசிய கடலாய்வு தொழில் நுட்ப நிறுவனம் அதிநவீன கருவிகளை கொடுத்துள்ளது. அந்த நவீன கருவிகளை நீர் மூழ்கி கப்பலில் எடுத்து சென்று தேடுதல் வேட்டை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) அந்த பணியை நீர்மூழ்கி கப்பல்கள் தொடங்கின.

இதற்கிடையே தேசிய கடலாய்வு தொழில் நுட்ப நிறுவனத்தின் அதிநவீன ஆய்வுக் கப்பலான சாகர் நிதி மூலம் தேடும் பணியை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது அந்த அதிநவீன கப்பல் மொரிஷியஸ் நாட்டுக்கு சென்றுள்ளது. அங்கிருந்து அந்த கப்பல் புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. நாளை (வியாழக்கிழமை) அந்த நவீன கப்பல் சென்னை கடல் பகுதிக்கு வந்து விடும். அன்றே அந்த நவீன கப்பல் தேடுதல் பணியைத் தொடங்கும். அதன் மூலம் விமானம் விழுந்த இடத்தை கண்டு பிடித்து விட முடியும் என்று அதிகாரிகள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்