முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக மீனவர்களின் படகுகளை காலம் தாழ்த்தாமல் இலங்கை திருப்பிதர வேண்டும்: ஜி.கே.வாசன்

புதன்கிழமை, 27 ஜூலை 2016      அரசியல்
Image Unavailable

சென்னை, இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை காலம் தாழ்த்தாமல் திருப்பிதர வேண்டும் என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழக மீனவர்கள் ஆழ் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அவர்களை இலங்கை கடற்படை அச்சுறுத்துவதும், தாக்குவதும், மீன்பிடிச் சாதனங்களை சேதப்படுத்துவதும், சிறைப்பிடித்துச் செல்வதும், மீன்பிடிப் படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 46 நாட்களில் 77 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து இலங்கை சிறையில் அடைத்திருந்தது.தமிழகத்தைச் சேர்ந்த த.மா.கா. உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் தொடர்ந்து மீனவர் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி வருகின்றன. அதன் பயனாக கடந்த 25-ந்தேதி 49 மீனவர்களையும், 26-ந்தேதி 24 மீனவர்களையும் இலங்கை அரசு விடுவித்தது. இது தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் தொடர் கோரிக்கைகளுக்கும், மீனவச் சங்கங்களின் போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி.மேலும் மீதமுள்ள 4 மீனவர்களை இலங்கை அரசு உடனடியாக விடுதலை செய்வதற்கும், விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் பத்திரமாக நாடு திரும்புவதற்கும் தேவையான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும்.மேலும் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர தற்போது இலங்கை வசம் உள்ள 102 மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக ஒப்படைக்க இலங்கையை மத்திய அரசு வற்புறுத்த வேண்டும்.ஏற்கனவே இலங்கை நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட தீர்ப்பின்படி தமிழக மீனவர்களின் 18 படகுகள் ஒப்படைக்கப்படாமல் சேதமடைந்து போய்விட்டதாக இலங்கை அரசு தெரிவித்தது. அதற்கு உரிய நிவாரணத்தை இலங்கை அரசிடம் இருந்து மத்திய அரசு பெற்றுத்தர வேண்டும்.

இல்லையென்றால் மத்திய அரசே நிவாரணத் தொகையை வழங்க முன்வர வேண்டும்.இந்த மாத இறுதியில் டெல்லியில் மத்திய அரசு மீனவப் பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த இருப்பதாக தெரிகிறது. அந்த பேச்சு வார்த்தையின் மூலம் தமிழக மீனவர்களுக்கு நியாயம் கிடைத்திட மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.மேலும் இரு நாட்டு மீனவப் பிரதிநிதிகளுக்கு இடையே விரைந்து அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்று, அதன் மூலம் மீனவப் பிரச்சனைக்கு சுமூக, நிரந்தர தீர்வு காண, ஒரு நல்ல சூழலை மத்திய அரசு ஏற்படுத்திட வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்