முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்களுக்கு எதிரான தாக்குதலை நாங்கள் நியாயப்படுத்தவில்லை: மத்திய அரசு விளக்கம்

புதன்கிழமை, 27 ஜூலை 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - தலித் பிரிவினர் அல்லது பெண்களுக்கு எதிரான தாக்குதலை எந்தவகையிலும் ‘நாங்கள் நியாயப்படுத்தவில்லை’ என்று கூறிஉள்ள மத்திய அரசு, பெண்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய பிரதேச அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கூறிஉள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் பசு இறைச்சி விற்பனை செய்ததாக தாக்கப்பட்ட விவகாரம் நேற்று பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்டது. மாநிலங்களவை தொடங்கியதும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, குஜராத் மாநிலத்தில் தலித் வாலிபர்கள் தாக்கப்பட்டதை தொடர்ந்து, மத்திய பிரதேசத்தில் பசு இறைச்சி விற்பனை செய்ததாக இரு பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது என்று இப்பிரச்சனையை எழுப்பினார்.

பா.ஜனதா ஒருபுறம் பெண்கள் குழந்தைகளை பாதுகாப்பது குறித்தும், அவர்கள் கவுரவிக்கப்படவேண்டியது குறித்தும் பேசுகிறது. மறுபுறம் அவர்கள் மீது குண்டர்களை ஏவிவிடுகிறது என்று குற்றம் சாட்டினார்.  குஜராத் மாநிலத்தில் தலித் இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பா.ஜனதா ஆட்சி செய்யும் மத்திய பிரதேசத்தில் பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. பசு பாதுகாப்பு என்ற தலித் சமூகத்தினர் மீது தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி பதில் அளிக்கவேண்டும் என்று மாயாவதி கூறினார்.  மாயாவதி பேச்சை முடித்ததும் அவருடைய கட்சியின் எம்.பி.க்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். அவர்களுக்கு காங்கிரசும் ஆதரவு கொடுத்தது. “தலித் பிரிவினர்களுக்கு எதிரான அரசை சகித்துக் கொள்ளமுடியாது,” என்று கோஷம் எழுப்பினர்.

பசுவை பாதுகாப்பதாக கூறி தலித் பிரிவினர் மீது தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக பிரதமர் மோடி பதில் அளிக்கவேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ஆனந்த் சர்மா வலியுறுத்தினார். மாநிலங்களவை துணை சபாநாயகர் பி.ஜே குரியன் பேசுகையில், பூஜ்ஜிய நேரத்தில் 13 உறுப்பினர்கள் நோட்டீஸ் வழங்கிஉள்ளனர், இது சரியானது கிடையாது.  இவ்விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்றால் அவர்கள் நோட்டீஸ் வழங்கவேண்டும்,” என்று கூறினார். மாயாவதிடம் பேசிய குரியன் நீங்கள் உங்களுடைய இருக்கைக்கு செல்லுங்கள், அரசை பதில் அளிக்க நான் கூறுவேன்,” என்றார். காங்கிரஸ் உறுப்பினர்களையும் இருக்கைக்கு செல்ல கேட்டுக் கொள்ள குலாம் நபி ஆசாத்திடம் கேட்டுக் கொண்டார். 

காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஆசாத் பேசுகையில், பசுவை பாதுகாப்பதற்கு நாங்கள் எதிரானவர்கள் கிடையாது ஆனால் பசு பாதுகாப்பு என்ற பெயரில் இஸ்லாமியர்கள் மற்றும் தலித்கள் குறிவைக்கப்படுவதற்கு நாங்கள் எதிரானவர்கள்,என்று கூறினார். இதனையடுத்து உறுப்பினர்கள் அனைவரும் தங்களது இருக்கைக்கு சென்றனர். மத்திய மந்திரி நக்வி பதில் அளித்து பேசினார். எந்த ஒரு வடிவத்திலும் மற்றும் எந்த ஒரு மாநிலத்திலும் வன்முறை என்பது கண்டனத்திற்குரியது. தலித் அல்லது பெண்களுக்கு எதிரான தாக்குதலை ’நாங்கள் நியாயப்படுத்தவில்லை’ தேசம் சட்டத்தின்படி ஆட்சி செய்யப்படுகிறது,

படைகளின் வழியாக கிடையாது. மத்திய பிரதேச மாநில அரசு இப்பிரச்சனையில் நடவடிக்கை எடுத்து உள்ளது, வழக்குப்பதிவு செய்து உள்ளது. வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்றும் தலித் மற்றும் இஸ்லாமியர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்றும் அரசு பணியாற்றி வருகிறது என்றார்.  மேலும், எதிர்க்கட்சிகள் இதுபோன்ற உணர்வுபூர்வமான விவகாரங்களில் அரசியல் செய்யக் கூடாது, மதநல்லிணக்கம் மற்றும் நாட்டின் ஒற்றுமைக்கு பாதிப்பு ஏற்படுத்த கூடாது என்று நக்வி வலியுறுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்