முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக சட்டசபையில் 4-வது நாளாக தொடர்ந்து தி.மு.க.வினர் ரகளை

வியாழக்கிழமை, 28 ஜூலை 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : தொடர்ந்து 4-வது நாளாக தமிழக சட்டசபையில்  தி.மு.க எம்.எல்.ஏ.,க்கள் நேற்றும் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 52 நிமிடங்கள் முடங்கிய சட்டசபை சபாநாயகரின் உத்தரவுக்கு பின் அமைதி திரும்பியது.

தமிழக சட்டசபையில் பட்ஜெட் விவாதத்தில் எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன் நேற்று பேசினார். அப்போது அவர் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு குறித்து பேசியபோது நிதியமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் பதிலளித்தார். இதைத்தொடர்ந்து ஐவுளித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், கடந்த தி.மு.க ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு எவ்வாறு இருந்தது என்பது குறித்து கருத்துக்களை தெரிவித்தார். அதற்கு தி.மு.க.,வினர் கடும் கோபத்துடன் அவர் கூறிய கருத்துக்களை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

இதையடுத்து தி.மு.க.,வினர் அனைவரும் ஒரே நேரத்தில் எழுந்து நின்று அமைச்சர் மணியன் கருத்தை அவைக்குறிப்பில் நீக்க வேண்டும் என்று குரல் எழுப்பினர் அப்போது சபாநாயகர் குறுக்கிட்டு, அனைவரும் அமருங்கள் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் தி.மு.க உறுப்பினர்கள் யாரும் இருக்கையில் அமரவில்லை. கூச்சலிட்டு ரகளையில் இறங்கிய வண்ணமிருந்தனர். அப்போது எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன் குறிப்பிட்ட கருத்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக சபாநாயகர் அறிவித்தார்.

அமைச்சர் ஒ.எஸ்.மணியனின் பேச்சு நீதிமன்ற வழக்குக்கு குந்தகம் விளைவிப்பதாக இருந்தால் நீக்குகிறேன் என்று சபாநாயகர் தெரிவித்தார். ஆனால், தி.மு.க உறுப்பினர்கள் அதை கேட்கவில்லை. முன்வரிசைக்கு வந்து சபாநாயகருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சபாநாயகரை எதிர்த்து கோஷங்களையும் எழுப்பினர். இதனால் சட்டசபையில் பெரும் கூச்சல் குழப்பமும் அமளிதுமளியும் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து சபாநாயகர் உங்களுக்கு உரிய மரியாதை கொடுத்து பேச அனுமதித்து வருகிறேன். சபாநாயகர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் விதி தான், தீர்ப்பு தான் என்று கூறினார். அப்போது தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் முன்வரிசைக்கு வந்து சபாநாயகருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதற்கிடையே துரைமுருகன் எழுந்து அமைச்சரின் கருத்து குறித்து சபாநாயகர் தீர்ப்பு வரும் வரை பத்திரிகைகளில் வெளியிடக்கூடாது என்று வலியுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து பட்ஜெட் மீது மட்டுமே பேசுமாறு துரைமுருகனை சபாநாயகர் அழைத்தார். எதிர்க்கட்சித்துணைத்தலைவர் துரைமுருகனின் கோரிக்கையை ஏற்று தனது தீர்ப்பு வரும்வரை அமைச்சரின் கருத்தை வெளியிடக்கூடாது என்று சபாநாயகர் உத்தரவிட்டார். இதன் காரணமாக நேற்று பிற்பகல் 2-28 மணிக்கு தொடங்கிய அமளி, 52 நிமிடத்திற்கு பின்னர் மாலை 3-20 மணிக்கு முடிவுக்கு வந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்