முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் : இலங்கை அணி மீட்டார் மெண்டிஸ் சதம்

வியாழக்கிழமை, 28 ஜூலை 2016      விளையாட்டு
Image Unavailable

பல்லேகெலே : ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை அணி வீரர் குசால் மெண்டிஸ் அபாரமாக சதம் அடித்து அணியை சரிவிலிருந்து மீட்டுள்ளார்.

இலங்கை- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் பல்லேகெலேயில் செவ்வாயன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் மேத்யூஸ் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் களம் இறங்கிய இலங்கை அணி ஆஸ்திரேலியாவி்ன் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 117 ரன்னில் ஆட்டம் இழந்தது.

பின்னர் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. இலங்கை அணியின் அனுபவ பந்து வீச்சாளர் ரங்கானா ஹெராத், அறிமுக வீரரான சண்டகான் ஆகியோரின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆஸ்திரேலியா அணி 203 ரன்னில் சுருண்டது. ஹெராத், சண்டகான் ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

அடுத்து 86 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 1 விக்கெட் இழப்பிற்கு 6 ரன்கள் எடுத்திருந்தது. குசால் பெரேரா 4 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டார்க் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார். அப்போது மழை பெய்ததால் 2-வது நாள் ஆட்டம் அத்துடன் முடிவடைந்தது.

கவுசல் சில்வா 2 ரன்கள் எடுத்த நிலையில் களத்தில் இருந்தார். நேற்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. சில்வாவுடன் கருணாரத்னே ஜோடி சேர்ந்தார். ஆட்டம் தொடங்கிய 3-வது பந்தில் கருணா ரத்னே ரன் ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். 2 ரன்களுடன் நின்றிருந்த சில்வா மேலும் ஐந்து ரன்கள் எடுத்து 7 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து குசால் மெண்டீஸ் களம் இறங்கினார். இவருடன் குப்டன் மேத்யூஸ் ஜோடி சேர்ந்தார். மேத்யூஸ் நிதானமாக விளையாட, மெண்டிஸ் அதிரடியாக விளையாடினார். அணியின் ஸ்கோர் 86 ரன்னாக இருக்கும்போது மேத்யூஸ் 9 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதனால் இலங்கை அணி 2-வது இன்னிங்சிலும் குறைந்த ரன்னில் ஆட்டம் இழந்துவிடும் என்று ரசிகர்கள் எண்ணினார்கள்.

ஆனால், 5-வது விக்கெட்டுக்கு மெண்டிஸ் உடன் சண்டிமால் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. லயனின் சுழற்பந்து, ஸ்டார்க் மற்றும் ஹசில்வுட் ஆகியோரின் வேகப்பந்தை சிறப்பாக எதிர்கொண்டு மெண்டிஸ் ரன்கள் குவித்தார். இதனால் 143 பந்துகளை சந்தித்த மெண்டிஸ் சதம் அடித்தார்.

இலங்கை அணியின் ஸ்கோர் 203 ரன்னாக இருக்கும்போது சண்டிமால் 42 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 117 ரன்கள் எடுத்து நம்பிக்கை ஊட்டியது. அடுத்து மெண்டிஸ் உடன் தனஞ்செயா டி சில்வா ஜோடி சேர்ந்தார். சதத்தைக் கடந்த மெண்டிஸ் தேனீர் இடைவேளையின் கடைசி ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்ததன் மூலம் 150 ரன்னை தாண்டினார்.

இலங்கை அணி தேனீர் இடைவேளை வரை 5 விக்கெட் இழப்பிற்கு 253 ரன்கள் எடுத்துள்ளது, மெண்டிஸ் 157 ரன்னுடனும், டி சில்வா 24 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியாவை விட இலங்கை அணி 167 ரன்கள் கூடுதலாக பெற்றுள்ளது. இன்னும் 100 ரன்கள் அடித்து ஆஸ்திரேலியாவிற்கு 250 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தால் இலங்கை இந்த டெஸ்டில் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்