முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வருவாய் பற்றாக்குறை செலவினங்களை கட்டுபடுத்த அரசே நடவடிக்கை எடுக்கும் : சட்டசபையில் நிதியமைச்சர் தகவல்

வெள்ளிக்கிழமை, 29 ஜூலை 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை  - கனிம வள விற்பனையை அரசே ஏற்கும் என்று அறிவித்திருப்பதால் அரசுக்கு கூடுதல் வருவாய் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக நிதியமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.  தமிழக சட்டசபையில் உறுப்பினர்களின் விவாதங்களுக்கு நிதியமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் அளித்த பதில் வருமாறு., பெட்ரோல் விலை குறைந்துள்ளதால் ஏற்பட்டுள்ள வரி இழப்பைச் சமாளிக்க, இந்த அரசால் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என உறுப்பினர் ஒரு கேள்வி எழுப்பினார். நடப்பாண்டில், பொருளாதார தேக்கநிலை மாறி, பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க பொதுவான அறிகுறிகள் தென்படுகின்றன. அதனால்தான் உற்பத்தி துறையின் வளர்ச்சியும் அதிகரித்து வருகிறது. நம் மாநிலத்தில் அரசும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. குறிப்பாகச் சொல்லவேண்டுமானால் தொலைநோக்குத் திட்டம் 2023-ன் படி, பல்வேறு கட்டமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டும், தொடங்கப்பட உள்ள நிலையிலும் உள்ளன.

இவை பெரும்பாலும் அரசு மூலதனமாகவும், அரசு-தனியார் பங்களிப்புடனும் இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுதவிர, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டைத் தொடர்ந்து, தனியார் முதலீடுகளும் ஈர்க்கப்பட்டு வருகின்றன. சிறு, குறு தொழில்களிலும், போடப்பட்ட பல ஒப்பந்தங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவையெல்லாம் பொருளாதார சூழ்நிலையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகின்றன எனக் கருதுகிறோம். அதன் அடிப்படையில்தான், வரி வருவாயிலும், 2015-2016-ம் ஆண்டு கணக்குப்படியான வருவாயில் சுமார் 12.50 சதவீத வளர்ச்சியைச் சேர்த்து, 2016-2017-ல் வரி வருவாய் கணிக்கப்பட்டுள்ளது. இது மேலும் உயருமேயானால், அந்த கூடுதல் நிதி ஆதாரங்கள் மூலம், வருவாய் பற்றாக்குறை குறையும்.

வருவாயை அதிகரிக்க, அரசே கனிம வளத்தை பிரித்து விற்கும் பொறுப்பை ஏற்கும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டு, அது சம்பந்தமான அறிவிப்பு, ஆளுநர் உரையிலும் இடம்பெற்றுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளிலும், கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. இது ஒருபுறம் இருக்க, வருவாய் பற்றாக்குறையைக் குறைக்க, செலவினங்களைக் கட்டுப்படுத்தவும் அரசு தொடர்ந்து நல்ல பல நடவடிக்கை எடுக்கும். கடன் அளவு 2.52 லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டது என்றும், இதனால் அதிகரிக்கும் வட்டி சுமையைச் சமாளிக்க அரசு என்ன செய்யப்போகிறது எனவும், ஒரு உறுப்பினர் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் 6,353 கோடி ரூபாய் கடனை, அரசு ஏற்றுக்கொண்டதன் காரணமாகவும், கடன் அளவும், வட்டிச் சுமையும் அதிகரித்துள்ளது.

எனினும், இது நிதிநிலை நிர்வாக பொறுப்புடைமைச் சட்டத்தின் வரையறைக்குள் இருப்பதால், அரசுக்கு கடனையும், வட்டியையும் செலுத்தும் திறன் உள்ளது என்றும், அதனை தவணை தவறாமல் செலுத்தி வருகின்றது என்றும், ஏற்கெனவே தெளிவுபடுத்தினேன்.
கடனைக் குறைக்க வேண்டும் என்பதில் யாருக்கும் வேறுபட்ட கருத்து இல்லை. ஆனால் தற்போதைய பொருளாதார மந்த நிலையில், மாநில அரசு கடன் பெற்றுத் தான் நிதிப் பற்றாக்குறையை ஈடு செய்ய வேண்டியுள்ளது. வருங்காலத்தில் இத்தகைய நிலை மாறும் என்று நான் நம்புகிறேன். மாநிலங்களுக்கான நிதி பகிர்வின் அளவு, மத்திய அரசின் வரி வருவாயில் 32 சதவீதத்திலிருந்து, 42 சதவீதமாக உயர்த்தப்பட்டது. ஆனால் அதே வேளையில், எட்டு மத்திய அரசின் திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன. பல்வேறு மத்திய அரசின் திட்டங்களுக்கான நிதி பகிர்வு முறையில், மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. உதாரணமாக, தேசிய வேளான் திட்டத்தில் 100 சதவீதம் மத்திய அரசு மானியம் என்று இருந்ததை, 60 சதவீதமாகக் குறைத்து, மீதமுள்ள 40 சதவீதத்தை, மாநில அரசே ஏற்க நேரிட்டது. ஊரக வீட்டு வசதி திட்டத்தில், மத்திய-மாநில அரசின் பங்கு 75:25 ஆக இருந்தது, 60:40 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், பல திட்டங்களில், மத்திய அரசின் பங்கு குறைக்கப்பட்டுள்ளதால், அதை ஈடு செய்ய, மாநில அரசு கூடுதல் நிதிச் சுமையை ஏற்க நேரிட்டது. இந்த மாற்றங்களால் மாநில அரசுக்கு, ஆண்டுக்கு கூடுதலாக 2,600 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. மத்திய அரசின் முக்கிய திட்டங்களான தேசிய ஊரக குடிநீர் திட்டம், தேசிய வேளான் வளர்ச்சித் திட்டம், வறுமை ஒழிப்புத் திட்டம் போன்ற திட்டங்களுக்கான மத்திய அரசின் ஒட்டுமொத்த நிதி குறைக்கப்பட்டுவிட்டது.  உதாரணமாக, தேசிய ஊரகக் குடிநீர் திட்டத்திற்கு, 2014-2015 ஆம் ஆண்டில், இந்தியா முழுமைக்கும் மத்திய அரசு திருத்த மதிப்பீடுகளில் ஒதுக்கிய நிதி, 10,890 கோடி ரூபாய். ஆனால் 2015-2016-ம் ஆண்டில் திருத்த மதிப்பீடுகளில், இந்தத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி 4,262 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், தேசிய வேளான் வளர்ச்சித் திட்டத்திற்கு, நாட்டின் முழுமைக்கும் 2014-2015-ம் ஆண்டில் ஒதுக்கிய நிதி 9,954 கோடி ரூபாய்.

அதே சமயத்தில் 2015-2016-ம் ஆண்டில், நாடு முழுமைக்கும் இத்திட்டத்திற்கு ஒதுக்கிய நிதி 4,500 கோடி ரூபாய். இந்தத் திட்டங்களில், மத்திய அரசின் ஒதுக்கீடு குறைந்ததால், தமிழ்நாட்டிற்கு கிடைத்து வந்த ஒதுக்கீடும் குறைந்துவிட்டது. எனவே, இந்த திட்டங்களை, மாநில அரசு தொய்வின்றி, தொடர்ந்து செயல்படுத்திட, தனது நிதி ஆதாரங்களை கூடுதலாகச் செலவிட வேண்டியுள்ளது.  மத்திய நிதி பகிர்வில், 32 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்த்திய அதேவேளையில், மாநிலங்களுக்கு இடையேயான நிதி பகிர்வில் தமிழ்நாட்டிற்கான பங்கு, பொது வரியில் 4.969 சதவீதத்திலிருந்து, 4.023 சதவீதமாகவும், சேவை வரியில் 5.047 சதவீதத்திலிருந்து, 4.104 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், 42 சதவீதம் உயர்த்தியதில், கூடுதலாக தமிழ்நாட்டிற்கு ஆண்டுக்கு கிடைத்திருக்க வேண்டிய 6000 கோடி ரூபாய் நிதி, தமிழ்நாட்டிற்கு கிடைக்க வழியில்லாமல் போய்விட்டது. இதை மத்திய அரசு குறைத்துவிட்டதாக குறை சொல்லவில்லை. இந்த மாற்றங்கள், 14 வது நிதிக் குழுவின் பரிந்துரைப்படி, மத்திய அரசு எடுத்த முடிவு.

இந்த முடிவால் தமிழ்நாடு போன்ற, ஒரு சில மாநிலங்கள்தான் பாதிக்கப்பட்டன. அதனால் தான், மத்திய அரசிடம் இந்த இழப்பினை ஈடு செய்ய முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.  இதைக் கருத்தில் கொண்டு, 2015-2016-ம் ஆண்டில் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு, நிதி வழங்கும்போது, 552 கோடி ரூபாயை மத்திய அரசும் வழங்கியது. 14-வது நிதிக்குழு பரிந்துரைத்த நிதிப் பகிர்வால், பல மாநிலங்கள் பயன் பெற்றாலும், தமிழ்நாடு போன்ற ஒரு சில மாநிலங்கள் பெரும் பாதிப்பைச் சந்திக்க நேரிட்டன என்பது உண்மை. நமது மாநிலம் தற்போது சந்தித்து வரும் நிதி பற்றாக்குறைக்கு இதுவும் ஒரு காரணம் என்பதை மாமன்றத்திற்குத் தெரிவிக்க விரும்புகிறேன். தமிழ்நாட்டிற்கு மத்திய வரி பகிர்வின் மூலம் 2014-2015-ம் ஆண்டில் கிடைத்த வரி அளவு 16,824 கோடி ரூபாயாகவும், 2015-2016-ம் ஆண்டில் 20,353 கோடி ரூபாயாகவும் உள்ளது.

ஆனால், மத்திய அரசின் நிதி பகிர்வில், 32 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்த்தியதன் அடிப்படையில், நமக்கு ஏற்கெனவே கிடைத்து வந்த பகிர்வின் அளவு கடைப்பிடிக்கப்பட்டிருந்தால், தமிழ்நாட்டிற்கு 26,000 கோடி ரூபாய், அதாவது கூடுதலாக 6,000 கோடி ரூபாய் கிடைத்திருக்கும். அதைத்தான் நாம் நிதி இழப்பாகக் கருதுகிறோம் என்பதை இங்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்