முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டப்பேரவை நடவடிக்கைகளுக்கு தி.மு.க.வினர் திட்டமிட்டே குந்தகம் விளைவிக்கிறார்கள் : சபாநாயகர் கடும் எச்சரிக்கை

வெள்ளிக்கிழமை, 29 ஜூலை 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை  - அவையை நடத்த விடாமல் தன்னை ஒருமையில் பேசி அவமானப்படுத்துவதாக தி.மு.க எம்.எல்.ஏக்கள் மீது சபாநாயகர் குற்றம்சாட்டியுள்ளார். தி.மு.க உறுப்பினர்கள் தொடர்ந்து அவைக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டால் தி.மு.க உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.  சட்டசபையில் நேற்று முன்தினம் ஜவுளித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி தி.மு.க உறுப்பினர்கள் பெரும் ரகளையில் ஈடுப்பட்டனர். அப்போது சபையை அமைதியாக நடத்தும் வகையில், அமைச்சர் கூறிய கருத்தை பத்திரிகைகள் செய்தியாக வெளியிடக்கூடாது என்று உத்தரவிட்டு, அதை பற்றி நாளை (இன்று) தீா்ப்பளிப்பதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் நேற்று காலை 10 மணிக்கு சட்டசபை கூடியது.

நிதிநிலை அறிக்கை குறித்து உறுப்பினர்கள் எழுப்பிய விவாதங்களுக்கு பதிலளிக்க நிதியமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தயார் நிலையில் இருந்தார். அப்போது திடீரென எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்தார். அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேச்சு குறித்து இப்போதே தீர்ப்பளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதுபற்றி தனது தீர்ப்பை பின்னர் வெளியிடுவதாக சபாநாயகர் அறிவித்தார். அதற்கு தி.மு.க.,வினர் உடன்படவில்லை. இப்போதே வெளியிட வேண்டும் என்று கேட்டு சபாநாயகருக்கு நிர்ப்பந்தம் கொடுத்தனர். ஆனால் சபாநாயகர் அதற்கு இணங்கவில்லை. இதைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.கவினர் வெளிநடப்பு செய்தனர். அவர்களோடு காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் உறுப்பினர்களும் வெளிநடப்பில் ஈடுப்பட்டனர்.

தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக்கட்சியினரின் செயலுக்கு சட்டபேரவையில் சபாநாயகர் தனபால் கடும் கண்டனம் தெரிவித்து பேசினார். அவர் பேசியதாவது., சட்டசபையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி குறித்து நாளை தீர்ப்பு சொல்கிறேன் என்று தெரிவித்திருந்தேன். அது தொடர்பான தீர்ப்பை இன்று வழங்க உள்ளேன். அவை தொடங்கிய உடனேயே தீர்ப்பை வழங்க வேண்டும் என்று தி.மு.க உறுப்பினர்கள் வலியுறுத்த முடியாது என்று பலமுறை அவர்களிடம் கூறினேன். ஆனால் அவர்கள் அவையை அவமதிப்பு செய்யும் வகையிலேயே நடந்து கொள்கின்றனர்.

என்னை இந்த அவையை நடத்த விடாமல் தொடர்ந்து குந்தகம் விளைவிக்கின்றனர். எதிர்க்கட்சி தலைவர் மற்றும் தி.மு.க எம்.எல்ஏ.க்கள் முன்னிலையிலேயே அக்கட்சியை சேர்ந்த அன்பழகன் என்னை ஒருமையில் பேசினார். நேற்று எதிர்க்கட்சி தலைவர், துணை தலைவர் அருகிலேயே நின்று கொண்டு தி.மு.க உறுப்பினர் பொன்முடி என்னை ஒருமையிலும், ஏக வசனத்திலும் பேசினார். அக்கட்சியை சேர்ந்த ரங்கநாதன், ஜெ.அன்பழகன் ஆகியோர் ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்ற நிலையை மீறி அநாகரீகமான முறையில் என்னை நோக்கி சைகை செய்தனர். அமைச்சர்கள் பதிலளிக்கும் போது அவர்களை விமர்சிப்பதும், கேலி, கிண்டல் செய்வதுமாக தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் நடந்து கொள்கிறார்கள். அது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

நான் எவ்வளவோ பொறுமையாக நடந்து கொள்கிறேன். என்னை சபாநாயகராக தேர்ந்தெடுத்து பதவியில் அமர்த்திய போது முதலமைச்சர் அறிவுரை வழங்கினார். துலாகோள் போல தராசு முள் போல நடுநிலை தவறாமல் இந்த அவையை நடத்த வேண்டும் என்று கூறினார். அதை நான் சிரமேற்கொண்டு பணியாற்றி வருகிறேன். ஒரு மனிதனை மனிதன் மதிக்க வேண்டும் என்பது கூட அவர்களுக்கு தெரியவில்லை. தனிப்பட்ட எனக்கு எந்த மதிப்பும், மரியாதையும் தர வேண்டாம். அதை நான் எதிர்பார்க்கவும் இல்லை. ஆனால் ஒரு பேரவை தலைவர் என்கிற அந்தஸ்திற்கு மரியாதை தந்தே ஆக வேண்டும். ஆனால் அதை மதிக்காமல் ஒருமையில் தரக்குறைவாக பேசுகின்றார்கள்.

என்னை வற்புறுத்தி, நிர்ப்பந்தப்படுத்தி அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு பெற நினைக்கிறார்கள். நான் எப்போதும் அனைவருக்கும் சமமான முறையிலேயே நடந்து கொண்டு வருகிறேன். அவையின் நடவடிக்கைகள் சூடாகும் நேரத்தில் நான் ஆளுங்கட்சி உறுப்பினர்களை பார்த்து அமருங்கள் என்றால் உடனே அமைதியாக அமர்ந்து விடுகிறார்கள். அம்மா இட்ட கட்டளையின்படி அவர்கள் நடந்து கொள்கிறார்கள். ஆனால் தி.மு.க.வினரை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகியோரே தூண்டி விடுகிறார்கள். அவர்கள் அவையை உதாசீனப்படுத்துகிறார்கள். எந்த விதிமுறையையும் முறையாக பின்பற்றுவதில்லை. அவையை ஜனநாயக முறையில் நான் நடத்த முடியாமல் நிர்ப்பந்தம் செய்கிறார்கள்.

நான் இன்று நிச்சயம் தீர்ப்பு சொல்கிறேன் என்று சொன்ன நிலையிலும் அதை ஒப்பு கொள்ளாமல் அவர்கள் வெளியேறி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவ்வாறு தொடர்ந்து அவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் அவை விதியினை பயன்படுத்தி தக்க நடவடிக்கை எடுப்பேன். முதலமைச்சர் எப்படி தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க பாடுபடுகிறார்களோ அதே போல இந்தியாவிலேயே எல்லா சட்ட சபைகளுக்கும் முன்மாதிரியான சட்டசபையாக ஆக்கும் பொறுப்பை நான் நிறைவேற்றுவேன். தி.மு.க.வினரின் செயலுக்கு மீண்டும் என் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு சபாநாயகர் தனபால் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்