முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரிவினைவாதிகள் பேரணி நடத்த திட்டம்: காஷ்மீரின் பல பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு

வெள்ளிக்கிழமை, 29 ஜூலை 2016      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர்  - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 20 நாட்களில் நடந்த கலவரத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்த ஸ்ரீநகரில் உள்ள ஜாமியா மஸ்ஜித் நோக்கி பிரிவினைவாதிகள் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதால் மாநிலத்தின் பல பகுதிகளில் நேற்று மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் சில வாரங்களுக்கு முன் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க தளபதி பர்கான் வானி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து காஷ்மீர் மாநிலத்தில் ஆங்காங்கே வன்முறையும், கலவரமும் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த கலவரங்களில் பாதுகாப்பு படையினர் உள்பட 50 பேர் உயிரிழந்தனர். இருதரப்பிலும் ஐயாயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். மாநிலத்தின் பிறபகுதிகளுக்கும் கலவரமும் வதந்திகளும் பரவாமல் இருக்க ஜம்மு-காஷ்மீர் முழுவதும் கடந்த 17 நாட்களாக செல்போன் மற்றும் இன்டர்நெட் சேவைகள் முடக்கி வைக்கப்பட்டிருந்தது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அங்குள்ள நிலைமையை நேரில் ஆய்வு செய்து அமைதி திரும்புவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தினார். தற்போது ஜம்மு பகுதியில் மீண்டும்  இயல்புநிலை திரும்பிவரும் நிலையில் அங்கு 17 நாட்களாக முடக்கி வைக்கப்பட்டிருந்த செல்போன் மற்றும் இன்டர்நெட் சேவை கடந்த 26-ம் தேதி மீண்டும் தொடங்கியுள்ளது.

இதையடுத்து, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கோடைக்கால தலைநகரான ஸ்ரீநகரில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு மற்றும் தடை உத்தரவுகளை ரத்து செய்து மாவட்ட மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதேபோல், அனந்நாக் மாவட்டம் தவிர இதர மாவட்டங்களிலும் படிப்படியாக ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது.  இந்நிலையில், கடந்த 20 நாட்களாக கலவரங்களில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஸ்ரீநகரில் உள்ள ஜாமியா மஸ்ஜித் அருகே நேற்று இரங்கல் கூட்டம் நடத்த பிரிவினைவாத இயக்கங்கள் திட்டமிட்டன.

இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள மாநிலம் முழுவதிலும் இருந்து பேரணியாக திரண்டு வருமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 31-ம் தேதி கடையடைப்பு போராட்டத்தை தொடரும் படியும் பிரிவினைவாதிகள் அறிவித்துள்ளனர். எனவே, இந்த பேரணி மற்றும் இரங்கல் கூட்டத்தால் மீண்டும் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவதை தடுக்கும் வகையில் தெற்கு காஷ்மீரில் உள்ள அனந்நாக், குல்காம், புல்வாமா, சோபியான் மற்றும் வடக்கு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் ஆகிய பகுதிகளில் நேற்று மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களில் அந்தந்த காவல் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்