முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது

வெள்ளிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2016      ஆன்மிகம்
Image Unavailable

ஸ்ரீவில்லிபுத்தூர்  - ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோவில் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து தேரை இழுத்தனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நாச்சியார் (ஆண்டாள்) கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவில் கோபுரம் தமிழக அரசின் சின்னமாக விளங்கி வருகிறது. 108 வைணவ திருத்தலங்களில் பிரசித்தி பெற்று விளங்கும் இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூர திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.

இந்த விழாவில் நடக்கும் தேரோட்டத்தின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர திருவிழா கடந்த மாதம் 28-ந்தேதி தொடங்கியது. விழா தொடங்கிய நாளில் இருந்து தினமும் காலை, இரவில் ரெங்கமன்னார்-ஆண்டாள் ஆகியோர் 16 வண்டி சப்பரம், சந்திரபிரபை, சிம்மம், சே‌ஷம், தங்க பரங்கி நாற்காலி, அனுமார், கோவர்த்தனகிரி, அன்னம், யானை உள்பட பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

7-ம் நாள் திருவிழாவி்ல் ஸ்ரீ ஆண்டாள்-ரெங்கமன்னார் சயன சேவையும், 8-ம் நாள் திருவிழாவில் ஆண்டாள் புஷ்ப பல்லக்கு, ரெங்க மன்னார் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர். விழாவின் சிகர நிகழ்ச்சி யான திரு ஆடிப்பூர தேரோட்டம் நேற்று சிறப்பாக நடந்தது. முன்னதாக காலை 7 மணியளவில் ஸ்ரீ ஆண்டாள்- ரெங்க மன்னாருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி- அம்பாள் தேரில் எழுந்தருளினர். அங்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. காலை 8.05 மணி அளவில் கோவிந்தா... கோவிந்தா என்ற கோ‌ஷம் விண்ணை பிளக்க அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் தேர் ஆடி அசைந்து வந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

முன்னதாக தேரோட்டத்தை மதுரை ஐகோர்ட்டு கிளை நீதிபதிகள் மாலா, கோகுல்தாஸ், விருதுநகர் மாவட்ட கலெக்டர் சிவஞானம், தென் மண்டல ஐ.ஜி.ஆனந்தகுமார் சோமானி, போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், மாவட்ட நீதிபதி தாரணி, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் செந்தில்வேலன், உதவி தலைவர் ஹரிகரன், கோவில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் ராமராஜா ஆகியோர் வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். தேர் கீழரத வீதி, தெற்கு, வடக்கு, மேற்கு ரத வீதிகளில் வலம் வந்து நிலையை அடைந்தது.

தேரோட்டத்தையொட்டி விருதுநகர் மாவட்டத்துக்கு நேற்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. தேரோட்டத்தை காண மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். பக்தர்களின் வசதிக்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட சுகாதார வசதிகள் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி சார்பில் செய்யப்பட்டிருந்தன. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் உத்தரவின் பேரில் நகர் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்