முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் தக்காளி விலை 10 ரூபாய்க்கு வீழ்ச்சி

சனிக்கிழமை, 6 ஆகஸ்ட் 2016      வர்த்தகம்
Image Unavailable

சென்னை - சென்னையில் 1 கிலோ தக்காளி 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. விலை மலிவாக உள்ளதால் வாங்க ஆள் இல்லாமல் குப்பையில் கொட்டுகிறார்கள். கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், ஓட்டன்சத்திரம், திண்டுக்கல், திருவண்ணாமலை, பெரியபாளையம் உள்பட பல பகுதிகளில் இருந்து அதிக அளவில் தக்காளி வந்து குவிகிறது.
இது தவிர ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு லாரி லாரியாக தக்காளி வருவதால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தக்காளி 1 கிலோ 100 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இப்போது திடீரென விலை குறைந்து 10 ரூபாய்க்கு விற்கப்படுவதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்து அதிக அளவில் தக்காளியை வாங்கிச் செல்கின்றனர். ஆனாலும் நிறைய தக்காளி தேங்குவதால் அழுகும் நிலையில் உள்ள தக்காளிகளை குப்பையில் கொட்டுகிறார்கள். கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் தக்காளி குவியல் குவியலாக தரையில் வீசப்பட்டுள்ளது. உண்மையிலேயே விவசாயிகளிடம் தக்காளியை கிலோவுக்கு 50 பைசா முதல் 1 ரூபாய்க்குள் தான் மொத்த வியாபாரிகள் வாங்கி விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்.

இதனால் உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பெருத்த நஷ்டம் அடைந்து வருகின்றனர். தர்மபுரி, ஓசூர் உள்பட பல பகுதிகளில் விவசாயிகள் தக்காளியை குப்பையில் கொட்டி வருகின்றனர். இதேபோல் பெரிய வெங்காயம் விலையும் மலிந்து 1 கிலோ 15 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து அதிக அளவில் வெங்காயம் லாரிகளில் கொண்டு வரப்படுவதால் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. வெண்டைக்காய், புடலங்காய், உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், கோஸ் உள்ளிட்ட மற்ற காய்கறிகள் விலை 25 ரூபாய்க்கு மேல் உள்ளது. புதினா, கொத்தமல்லி கட்டு 5 ரூபாய்க்கு கிடைக்கிறது.

மாம்பழம் சீசன் முடிந்து விட்டதால் நீள மாம்பழம் கிலோ 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சாத்துக்குடி ஆரஞ்சு பழம் கிலோ ரூ. 30-க்கு குறைந்துள்ளது. இதேபோல் உள்நாட்டு ஆப்பிள் கிலோ ரூ. 150-க்கும், வெளிநாட்டு ஆப்பிள் கிலோ ரூ. 180 முதல் ரூ. 220 வரை கிடைக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்