முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன்: பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்

புதன்கிழமை, 17 ஆகஸ்ட் 2016      விளையாட்டு
Image Unavailable

ரியோ டி ஜெனீரோ : ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டனில் உலக தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் சீன வீராங்கனையை வீழ்த்தி பி.வி.சிந்து அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் இந்தியாவின் பதக்க கனவு, நனவாகும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

31-வது ஒலிம்பிக் போட்டி பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனீரோ நகரில் நடந்து வருகிறது. இதுவரை 73 நாடுகள் பதக்க பட்டியலில் இணைந்து விட்டன. அமெரிக்கா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. 62 ஒலிம்பிக் சாதனையும், 21 உலக சாதனைகளும் படைக்கப்பட்டுள்ளன. ஒலிம்பிக் திருவிழா தொடங்கி 11 நாட்கள் ஆகியும் இந்தியாவினால் இன்னும் ஒரு பதக்கம் கூட வெல்ல முடியவில்லை. இதனால் பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.

பேட்மிண்டன், தடகளம், மல்யுத்தம் ஆகியவற்றில் மட்டுமே இந்திய வீரர்கள் தற்போது களத்தில் நீடிக்கிறார்கள். இவற்றில் ஏதாவது ஒரு பதக்கம் கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நெக்வால் வெளியேறினார். இருப்பினும் தொடர் சோகத்துக்கு மத்தியில் பேட்மிண்டன் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து ஆறுதல் அளித்து வருகிறார்.

மிகுந்த ஏக்கத்துடன் காத்திருக்கும் தாய்நாட்டு மக்களுக்கு, ஒலிம்பிக்கில் இந்தியா பதக்கப் பட்டியலில் இடம்பெறுவதற்கான வாய்ப்பை பிவி சிந்து பிரகாசப்படுத்தி உள்ளார். ஒலிம்பிக் பேட்மிண்டன் ஒற்றையரில் சாய்னாவுக்கு பிறகு கால்இறுதியை எட்டிய 2-வது இந்திய வீராங்கனை சிந்து ஆவார்.

ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் காலிறுதி போட்டியில், லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவரும், உலக தரவரிசையில் 2-வது இடம் பிடித்தவருமான சீனாவின் வாங் யிகானை எதிர்கொண்டார். மிகவும் பரபரப்பு நிறைந்த இந்த ஆட்டத்தில் பிவி சிந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சீன வீராங்கனையை வீழ்த்தினார். சீனா விராங்கனையும் சளைத்தவர் கிடையாது, பிவி சிந்துக்கு கடும் நெருக்கடியை கொடுத்தார். இருப்பினும் பிவி சிந்து சிறு பிழைகளைச் செய்தாலும், மன உறுதியை இழக்காமல் அபாரம் காட்டினார்.

சுமார் 51 நிமிடங்கள் நீடித்த இப்போட்டியில் சீன வீராங்கனை வாங்யிகானை பந்தாடினார். முதல் செட்டை மகிழ்ச்சியுடன் தொடங்கிய சீன வீராங்கனைக்கு சவால் விடும் அளவிற்கு பி.வி. சிந்து அபாரம் காட்டினார். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. 13-13, 17-17 என்ற சரிசமான அளவிற்கு இருவரும் புள்ளிக் கணக்கை கொண்டிருந்தனர். பிவி சிந்து 20-18 என்ற கணக்கில் முதல்செட்டில் முன்னிலை பெற்று இருந்த போது சீன வீராங்கனை சளைக்காமல் விளையாடினார். நெருக்கடியான இந்த ஆட்டத்தில் இந்திய வீராங்கனை 21-20 என்ற கணக்கில் வெற்றிப்பெற்றார்.

இரண்டாவது செட் தொடக்கத்திலே ஆட்டத்தை பிவி சிந்து தன் கைவசம் கொண்டுவந்தார், இருப்பினும் அனுபவம் வாய்ந்த சீன வீராங்கனை தொடர்ந்து நெருக்கடி கொடுத்தார். ஒருகட்டத்தில் 18-18 என்ற சமநிலையை இருவரும் அடைந்தனர். இருப்பினும் சீன வீராங்கனை வான் யிகான் செய்த ஒவ்வொரு தவறும் சிந்துவின் புள்ளிக்கணக்கை உயரச்செய்தது. 21-19 என்ற கணக்கில் பிவி சிந்து யிகானை தோற்கடித்து, அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார். சீன வீராங்கனை யிகானை தோற்கடித்த பிவி சிந்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

அரையிறுதிப்போட்டியில் பி.வி. சிந்து உலக தரவரிசையில் மூன்றாம் நிலை வீராங்கனையான ஜப்பானின் ஒகுகாரா நொஜோமியை சந்திக்கிறார். புதுடெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய யூத் 19 வயதுக்குட்பட்டோருக்கான பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து, ஜப்பானின் ஒகுகாரா நொஜோமியைத் 18-21, 21-17, 22-20 என்ற கணக்கில் தோற்கடித்து குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்