முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபாநாயகர் உருவபொம்மை எரிப்பு: தி.மு.க.வினரின் அராஜக செயல்களுக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்

வெள்ளிக்கிழமை, 19 ஆகஸ்ட் 2016      அரசியல்
Image Unavailable

சென்னை, தமிழக சட்டமன்ற சபாநாயகர் தனபாலின் உருவபொம்மை எரிப்பு மற்றும் சட்டசபை வளாகத்தில் தி.மு.க உறுப்பினர்கள் நடத்திய தர்ணா போராட்டம், தி.மு.க.வினர் நடத்திய போட்டி சட்டசபை கூட்டம் போன்ற செயல்களுக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

15-வது சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய நாளிலிருந்தே தி.மு.க. உறுப்பினர்கள் சட்டசபையில் திட்டமிட்டு ரகளை செய்து வருகிறார்கள். அன்றாடம் சபைக்கு வருவது, ஏதேனும் ஒரு பிரச்சினையை மையமாக வைத்து வெளிநடப்பு செய்வது அல்லது சபைக்குள்ளேயே அமளியில் ஈடுபடுவது போன்ற செயல்களில் தி.மு.க. உறுப்பினர்கள் திட்டமிட்டு ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு சபாநாயகர் தனபால் பலமுறை வேண்டுகோள் விடுத்தும், சில சமயங்களில் எச்சரிக்கை விடுத்தும்கூட தி.மு.க. உறுப்பினர்கள் அதை பொருட்படுத்தவில்லை. இதையடுத்து, சபையின் விதிகளை மீறி செயல்பட்டு அவையின் நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்தாக தி.மு.க. உறுப்பினர்கள் ஒரு வாரம் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

அதன்பிறகும் கூட தி.மு.க. உறுப்பினர்கள் தங்களது அநாகரீக செயல்களை கைவிடவில்லை. பேரவை வளாகத்தில் தர்ணா போராட்டம் நடத்துவது, போட்டி சட்டமன்றம் கூட்டம் நடத்துவது போன்ற செயல்களில் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் சபாநாயகர் தனபாலின் உருவபொம்மைகளும் சில இடங்களில் எரிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற தி.மு.க. உறுப்பினர்களின் அராஜக செயல்களுக்கு தமிழக தலைவர்கள் அனைவரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன், அ.தி.மு.க.வின் கூட்டணி கட்சி தலைவர்களான சே.கு.தமிழரசன், தனியரசு, கருணாஸ் எம்.எல்.ஏ., ஷேக் தாவூத் போன்ற தலைவர்கள் தி.மு.க. உறுப்பினர்களின் செயல்களை கடுமையாக கண்டித்துள்ளனர். அவர்களது செயல்கள் சட்டசபையின் மாண்புக்கு எதிரானது என்று அனைத்து தலைவர்களும் கூறியுள்ளனர்.

வைகோ கண்டனம்:

சபாநாயகர் தனபாலின் கொடும் பாவியை எரித்த தி.மு.க.வினருக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் ம.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம்  நடைபெற்றது. இக்ககூட்டத்தில் வைகோ பேசியதாவது.,

சட்டமன்ற பேரவை தலைவரின்  கொடும்பாவியை  எரித்த செயல் வெட்கப்பட வேண்டிய செயல்.  தி.மு.க மேலிடம் அதை கண்டித்து ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை. தி.மு.க. தலைமை இதுபோன்ற செயல்களை கண்டிக்க வேண்டாமா? அதற்கு மாறாக  கொடும்பாவி எரித்த தி.மு.க.,வினர் கைது என்ற செய்தியை மட்டும் தங்கள் பத்திரிக்கையில் பெரிய செய்தியாக வெளியிட்டுள்ளனர்.  நானும் பாராளுமன்றத்தில் பல ஆண்டுகள் பணியாற்றி உள்ளேன். இது போன்ற நிகழ்வுகளை கேட்டதும் இல்லை, பார்த்ததும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழிசை செளந்தரராஜன்:

சட்டசபை வளாகத்தில் தற்போது நடக்கும் நிகழ்ச்சிகள் கவலை அளிப்பதாக உள்ளது. சட்டசபை தலைவரின் உருவபொம்மை எரிப்பது கண்டனத்துக்குரியது. சட்டசபை வளாகத்திற்குள்ளேயே மாதிரி சட்டசபை கூட்டத்தை கூட்டி, அதை நாடகமாக நடித்து காட்டுவது நடைமுறையில் ஏற்றுக்கொள்ள முடியாதது. குறிப்பாக ஸ்டாலின் அதில் பங்கேற்ப்பது சரியல்ல. பிரச்சினைகளை எழுப்புவதற்காக சட்டசபைக்கு வரக்கூடாது. வழிநடத்தும் தலைவராகத்தான் எதிர்கட்சி தலைவர் இருக்கவேண்டுமே தவிர, வெளிநடத்தும் தலைவராக இருக்கக்கூடாது. என்று தமிழிசை வேதனையோடு தெரிவித்தார்.
இதே கருத்தை கருணாஸ் எம்.எல்.ஏ., தனியரசு எம்.எல்.ஏ. மற்றும் ஷேக் தாவூத் போன்ற தலைவர்களும் வலியுறுத்தி கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்