முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரியோ ஒலிம்பிக் மகளிர் பேட்மிண்டன் போட்டி:வெள்ளிப் பதக்கம் வென்று சரித்திரம் படைத்தார் சிந்து

வெள்ளிக்கிழமை, 19 ஆகஸ்ட் 2016      விளையாட்டு
Image Unavailable

ரியோடி ஜெனிரோ - பிரேசில், ரியோடி ஜெனிரோவில் நடக்கும் 31-வது ஒலிம்பிக்கில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து சாதனை படைத்தார். அவர் இறுதிப்போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினுடன் மோதிய ஆட்டத்தில் போராடி வெற்றி வாய்ப்பை இழந்தார். இருப்பினும் அவர் இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை சிந்து ஆவார். பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனிரோவில் 31-வது ஒலிம்பிக் போட்டி தற்போது நடந்து வருகிறது. கடந்த 5-ம் தேதி துவங்கிய இந்த உலக விளையாட்டு திருவிழா வருகிற 21-ம் தேதியுடன் நிறைவடைகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த ஒலிம்பிக் போட்டியில் தற்போது 206 நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரத்து 500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்தியா சார்பில் 118 வீரர் - வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த ஒலிம்பிக் போட்டியில் ஹரியானாவை சேர்ந்த சாக்‌ஷி மாலிக் மல்யுத்த போட்டியில் இந்தியாவிற்கு வெண்கலப்பதக்கம் பெற்று தந்து பெருமை சேர்த்தார். கடந்த 13 நாட்களில் ஒலிம்பிக் போட்டியில்  இந்தியாவிற்கு கிடைத்த ஒரே பதக்கமாக சாக்‌ஷி மாலிக் பெற்ற பதக்கம் இருந்தது. இந்த நிலையில் நேற்று நடந்த 14-வது நாள் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து இறுதிப்போட்டியில், ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினுடன் மோதினார். இந்த ஆட்டத்தில் ஆடிய கரோலினா உலக பேட்மிண்டன் அரங்கில் 1-வது இடத்தில் இருக்கும் வீராங்கனை ஆவார். அவர் நடப்பு சாம்பியானாகவும் திகழ்ந்தார்.

நேற்று முன்தினம் நடந்த அரை இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து ஜப்பானிய வீராங்கனை நோசோமி ஓகுராவை 21-19, 21-10 என்ற கணக்கில் நேர் செட்டில் தோற்கடித்தார். இந்த அதிரடி வெற்றி மூலம் சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தார். இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சிந்துவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி , பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்தினார்கள். இந்த நிலையில்  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பி.வி.சிந்துவிற்கு தனது வாழ்த்தினை தெரிவித்தார். சிந்து உலக பேட்மிண்டன் அரங்கில் 10-வது இடத்தில் இருப்பவர். ஆனால் அவரை எதிர்த்து இறுதிப்போட்டியில் ஆடிய கரோலினா மரின் முதல் இடத்தில் இருக்கும் வீராங்கனை ஆவார். இருப்பினும் சிந்து நேற்று மன உறுதியுடன் வலிமை மிக்க எதிராளியை எதிர் கொண்டார். அவரது மன உறுதியில் முதல் செட்டை 21-19 செட் கணக்கில் வென்று முன்னிலை பெற்றார். இருப்பினும் கரோலினா 2-வது செட் டை கைப்பற்றினார்.

கரோலினா 2-வது செட்டை 21-12 புள்ளி கணக்கில் கைப்பற்றியதால் இரு வீராங்கனைகளும் சம நிலையில் இருந்தார்கள். இறுதி செட்டை யார் கைப்பற்றி தங்கப்பதக்கம் பெறுவார்கள் என்கிற எதிர் பார்ப்பு உலகம் முழுவதும் ஏற்பட்டது. சிந்துவின் வெற்றிக்காக இந்தியாவில் பல மாநிலங்களில் விளையாட்டு ரசிகர்கள் பிரார்த்தனை மற்றும் சிறப்பு பூஜை செய்தார்கள். அவர்களது பிரார்த்தனைக்கு பலன் தரும் வகையில் சிந்துவின் ஆட்டத்திறனும் மிக நேர்த்தியாக இருந்தது. கரோலினா ஆடும் போது அடிக்கடி கூச்சல் போட்டார். இதுகுறித்து சிந்து, நடுவரிடம் புகார் தெரிவித்தார். இறுதி செட்டை கரோலின் 21-15 புள்ளி கணக்கில் சாம்பியன் ஆனார். இறுதிவரை சிந்து கடுமையாக போராடினார். அவரது ஆட்டம் கரோலினாவுக்கு பெரும் சவாலை தந்ததால் அவரால் சுலபமாக வெற்றி பெற முடியவில்லை. அவர் போராடியே வெற்றி பெற முடிந்தது.

சிந்து இரு முறை உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப்பதக்கம் பெற்றவர் ஆவார். ஒலிம்பிக் வரலாற்றில் இதுவரை இந்தியா சார்பில் 4 பெண்கள் மட்டுமே பதக்கம் வென்ற நிலையில், பி.வி.சிந்து 5-வதாக வெள்ளிப் பதக்கம் பெற்று அந்த கவுரவ பட்டியலில் இடம் பிடித்து அசத்தியுள்ளார். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை பளு தூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரிக்குத்தான் உண்டு. 2000-ம் ஆண்டில், சிட்னி (ஆஸ்திரேலியா) ஒலிம்பிக்கில் மல்லேஸ்வரி இந்த சாதனையை படைத்தார். அவர் வெண்கலம் வென்றார். இதன்பிறகு, லண்டனில், 2012ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில், குத்துச் சண்டை வீராங்கனை மேரிகோம் வெண்கலம் வென்றார்.

அதே ஒலிம்பிக்கில்  இந்திய வீராங்கனை சாய்னா நேவால். வெண்கல பதக்கத்தை தட்டிச் சென்றார். இதன்மூலம், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல், இந்திய பேட்மின்டன் வீராங்கனை என்ற பெருமையை அவர் தட்டி சென்றார். இதன்பிறகு நடப்பு ரியோ ஒலிம்பிக்கில், மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷிமாலிக் வெண்கல பதக்கம் தட்டிச் சென்று பெருமை சேர்த்தார். அவர்தான் நடப்பு ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பதக்கம் வென்ற முதல் வீராங்கனையும் ஆவார். இந்நிலையில், பி.வி.சிந்து தற்போது வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளதன் மூலம், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியாவின் 5-வது வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். நடப்பு ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த இரு பதக்கங்களும், மகளிரால் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்