முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரியோவில் 206 நாடுகள் கலந்து கொண்ட ஒலிம்பிக் கோலாகலமாக முடிவடைந்தது

ஞாயிற்றுக்கிழமை, 21 ஆகஸ்ட் 2016      விளையாட்டு
Image Unavailable

ரியோடிஜெனிரோ : 17 நாட்களாக நடந்த உலக விளையாட்டு திருவிழாவான 31வது ஒலிம்பிக் போட்டி நேற்று இரவு கோலாகலமாக முடிவடைந்தது. நிறைவு விழாவில் பிரேசில் பாடகர்கள், நடிகர்கள், விளையாட்டு சாதனையாளர்கள் கலந்து கொண்டனர். நிறைவு விழா ஆடல், பாடல், வீரர்கள் அணி வகுப்பு வாண வேடிக்கைகளுடன் நிறைவடைந்தது..

பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனிரோவில் 31வது ஒலிம்பிக் போட்டி இந்த மாதம் 5ம் தேதி துவங்கி நேற்றுடன் (ஆக.21) முடிவடைந்தது. இந்த உலக விளையாட்டு திருவிழா நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் போட்டியாகும் இந்த ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது ஒவ்வொரு நாட்டிற்கும் கவுரவம் மிக்க விஷயமாகவே உள்ளது.

கடந்த 17 நாட்களாக நடந்த ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்க நீச்சல் வீரர் பெல்ப்ஸ் தங்க பதக்கங்களை அதிக அளவில் குவித்து சாதனை படைத்தார். தடகள விளையாட்டை பொருத்த வரையில் கடந்த 2008ம் ஆண்டு பெய்ஜிங்(சீனா--2008) ஒலிம்பிக் போட்டி முதல் தற்போதைய ரியோ ஒலிம்பிக் போட்டி வரை ஜமைக்கா வீரர் உசேன் போல்ட்  தொடர்ந்து 3 ஹாட்ரிக் தங்கபதக்கங்களை வென்று ஒலிம்பிக்கில் சாதனை படைத்தார்.

அவர் பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் அதி வேக ஓட்ட ப்பந்தயமான 100 மீட்டர், 200 மீட்டர், மற்றும் 4x 100  மீட்டர் தொடர் ஓட்டம் ஆகிய 3 போட்டிகளில் தங்கம் வென்று சாதனையாளராக வலம் வந்தார். அவர் இந்த 3போட்டிகளிலும் லண்டன் ஒலிம்பிக்கிலும்(2012) தற்போதைய ரியோடிஜெனிரோ ஒலிம்பிக்கிலும் (பிரேசில்) தங்கம் வென்று தொடர்ச்சியாக 3 ஒலிம்பிக்குகளில் ஹாட்ரிக் தங்கம் வென்று சாதனை படைத்து உலக விளையாட்டு வீரர்களை திரும்பி பார்க்க வைத்தார்.

இந்தியாவை பொருத்த வரை இந்த ரியோ ஒலிம்பிக்கில் மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் வெண்கலப்பதக்கம் வென்றார். அவரை தொடர்ந்து பி.வி. சிந்து பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். ஒலிம்பிக் போட்டியில் தனி நபர் பிரிவில் வென்ளிப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையும் பி.வி.சிந்துக்கு உண்டு. அவரது குடும்பமே விளையாட்டு வீரர்கள் குடும்பம் ஆகும். அவரது தாயார் சென்னையில் சில ஆண்டுகள் இருந்து படித்தவர். எனவே அவர் தமிழில் நன்றாக பேசுவார்.

ரியோ  ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் போட்டியில் பதக்கம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஆந்திர வீராங்கனை சாய்னா நேவால் முழங்கால் காயம் காரணமாக தொடக்க சுற்று ஆட்டத்திலேயே தோற்றுப்போனார். அவருக்கு மும்பையில் முழங்கால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால் அவர் அடுத்த 4 மாதத்திற்கு எந்த போட்டியிலும் ஆட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சாய்னா நேவால் கடந்த லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற வீராங்கனை ஆவார்.

ரியோடி ஜெனிரோ ஒலிம்பிக்கில் இந்தியா உள்பட 206நாடுகளைச்சேர்ந்த 10ஆயிரத்து 500 வீரர்- வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்திய அணி 118 வீரர்- வீராங்கனைகளுடன் இந்த உலக போட்டியில் பங்கேற்றது. ரியோடி ஜெனிரோ ஒலிம்பிக் போட்டி நேற்று கோலாகலமாக முடிவடைந்தது.

ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவை காண 41 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டிக்கெட்டுகளை வாங்கியிருந்தனர்..

நிறைவு விழா நிகழ்ச்சிக்கு பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது..நிறைவு விழா இந்திய நேரப்படி இரவு 10 மணிக்கு துவங்கியது.  நிறைவு விழா  நிகழ்ச்சிகளில் 3 ஆயிரம் தன்னார்வலர்கள் மற்றும் 200 நடிகர்கள் கலந்து கொண்டனர்  என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் லியோனார்டோ கேடானோ தெரிவித்தார்.

நிறைவு விழா மரகானா ஸ்டேடியத்தில் நடைபெற்றது. நிறைவு விழாவில் பிரேசிலை சேர்ந்த சூப்பர் மாடலான ஜிசல் பன்ட்சென் ராம்வாக் பங்கேற்றார்.. ஜிசலின் நிகழ்ச்சி குறித்த அறிந்த ரசிகர்கள் உடனே இது பற்றி அதிக அளவில் கூகுளில் தகவல் பகிர்ந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்