முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்று தாயகம் திரும்பிய சிந்துவுக்கு உற்சாக வரவேற்பு

திங்கட்கிழமை, 22 ஆகஸ்ட் 2016      விளையாட்டு
Image Unavailable

ஐதராபாத்  - ரியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கத்தை வென்று தந்த வீராங்கனை பி.வி.சிந்து நேற்று தாயகம் திரும்பினார். நேற்று ஐதராபாத் விமான நிலையத்திற்கு வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனீரோவில் நடந்து வரும் 31-வது ஒலிம்பிக் போட்டி இன்று நிறைவடைந்தது. இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இதுவரை 2 பதக்கங்களே கிடைத்துள்ளன. இந்த பதக்கங்களை பெற்றுத்தந்த இருவருமே பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்களுக்கான பேட்மிண்டன் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-19, 12-21, 15-21 என்ற செட் கணக்கில், உலக தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினிடம் போராடி தோல்வி கண்டார். எனினும், 2-வது இடம் பிடித்த சிந்துவுக்கு வெள்ளிப் பதக்கம் கிட்டியது.

ஒலிம்பிக் வரலாற்றில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை சிந்துதான். இதனால் ஒட்டுமொத்த தேசமும் அவரை பாராட்டி கொண்டாடுகிறது. வெள்ளிப்ப தக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள 21 வயதான சிந்து, பரிசு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார். அவருக்கு ரூ.13 கோடிக்கும் அதிகமாக பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரேசிலில் இருந்து நேற்று காலை ஐதராபாத் விமான நிலையம் வந்தடைந்த சிந்துவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தெலுங்கானா மாநில துணை முதல்வர் முஹம்மது மஹ்மூத் அலி, சிந்துவின் பெற்றோரானா பி.வி.ரமணா - விஜயா தம்பதியர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள், ரசிகர்கள் ஆகியோர் திரளாக கூடிநின்று, வெற்றி வீராங்கனை சிந்து மற்றும் அவரது பயிற்சியாளர் கோபிசந்த் ஆகியோரை உற்சாகமாக வரவேற்றனர்.

எழுச்சிமிகு இந்த வரவேற்பை ஏற்றுகொண்ட சிந்து, ஒலிம்பிக்கில் வென்ற பதக்கத்தை உயர்த்தி காட்டியபோது அங்கு கூடியிருந்தவர்கள் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். பின்னர், விமான நிலையத்தில் இருந்து கச்சிபவுலி ஸ்டேடியம்வரை டபுள் டெக்கர் பஸ் மூலம் ரசிகர்கள் அவரை ஊர்வலமாக அழைத்து சென்றனர். அவரது அருகில் பயிற்சியாளர் கோபிநாத்தும் உடன் இருந்தார்.  வழியில் உள்ள சாலைகளின் இருபுறங்களிலும் திரளாக கூடியிருந்த மக்கள் சிந்துவை நோக்கி கையசைத்து வாழ்த்து தெரிவித்தனர். கச்சிபவுலி ஸ்டேடியத்தில் தெலுங்கானா மாநில அரசின் சார்பில் சிந்துவுக்கு பிரம்மாண்ட பாராட்டு விழா நடந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்