முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பி.வி.சிந்து, சாக்‌ஷிக்கு கேல் ரத்னா விருது

திங்கட்கிழமை, 22 ஆகஸ்ட் 2016      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : ரியோடி ஜெனிரோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் மற்றும் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை திபா கர்மகர், துப்பாக்கி சுடும் வீரர் ஜித்து ராய் ஆகியோருக்கு நாட்டின் உயரிய விருதான கேல் ரத்னா விருதை இந்த ஆண்டிற்கு மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த விருதுகளை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வருகிற 29ம் தேதியன்று வழங்கி வீரர்,வீராங்கனைகளை கவுரவிக்கிறார்.

பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனிரோவில் 31-வது ஒலிம்பிக் போட்டி நடந்தது. இந்த ஒலிம்பிக் போட்டியில் ஹரியானாவை சேர்ந்த மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக்  வெண்கலப்பதக்கம் வென்றார். அவரைத்தொடர்ந்து பேட் மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். ஒலிம்பிக் சரித்திரத்தில் தனி நபர் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ஆவார். இதேப்போன்று திரிபுராவை சேர்ந்த திபா கர்மகர் நூலிழையில் ஜிம்னாஸ்டிக் வெண்கலப்பதக்கத்தை தவற விட்டார் .

ரியோ ஒலிம்பிக்கில் சாதனை படைத்த இந்த இந்திய வீராங்கனைகள் மற்றும் துப்பாக்கி சுடும் வீரர் ஜித்து ராய், ஆகியோருக்கு இந்த ஆண்டிற்கான நாட்டின் உயரிய விளையாட்டு விருதான கேல் ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. திபா கர்மகர் பயிற்சியாளர் பிஸ்வேஷ்வர்  சாதனை பயிற்சியாளருக்கான துரோணாச்சாரியருக்கான விருதை பெறுகிறார். அவருடன்  நாகபுரி ரமேஷ்(தடகளம்) சாகர் மால் தயாள்(குத்துச்சண்டை) ராஜ் குமார் சர்மா(கிரிக் கெட்) எஸ்.பிரதீப் குமார் (நீச்சல்) மகாபிர் சிங்(மல்யுத்தம்) ஆகியோருக்கும் இந்த துரோணாச்சாரியார் விருது அளிக்கப்படுகிறது.

15 விளையாட்டு வீரர்களுக்கு அர்ஜூனா விருதும், 3 பேருக்கு தயான் சந்த் விருதும் அளிக்கப்படுகிறது. இதனைத்தவிர 2015-16ம் ஆண்டிற்கான அபுல் கலாம் ஆசாத் டிராபி பாட்டியாலாவில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்திற்கு அளிக்கப்படுகிறது. ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ 7.5லட்சமும் அர்ஜூனா விருது, துரோணாச்சாரியா , தயான் சந்த் விருது பெறும் வீரர்களுக்கு சான்றிதழ் மற்றும் தலா ரூ.5 லட்சம் பரிசு அளிக்கப்படுகிறது.

கேல் ரத்னா விருது மற்றும் அர்ஜூனா விருதுகளை தேர்வு செய்யும் குழுவிற்கு நீதிபதி எஸ்., கே. அகர்வால் தலைமை வகித்தார். அவர்  டெல்லி உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஆவார். துரோணாச்சாரியா, தயான் சந்த் விருதுக்கான வீரர்களை தேர்வு செய்யும் குழு குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் வீரர்களை தேர்வு செய்தது.

விருது வழங்கும் விழா வருகிற 29ம் தேதியன்று நடக்கிறது. இந்த விருதுகளை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அளிக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்