முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10 அரசு பொறியியல் கல்லூரிகளிலிருந்து 100 மாணவர்கள் அயல்நாட்டுக்கு பயிற்சிக்கு அனுப்பப்படுவார்கள் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 23 ஆகஸ்ட் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : 10 அரசு பொறியியல் கல்லூரிகளிலிருந்து 100 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தொழில்நுட்ப பயிற்சிக்காக அயல்நாட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என சட்டசபையில் நேற்று  முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

சட்டசபையில், விதி எண் 110-ன் கீழ்  முதல்வர் ஜெயலலிதா முன்வைத்த அறிக்கைகள் வருமாறு.,

தமிழ்நாட்டில் உள்ள மாணாக்கர்கள் குறிப்பாக கிராமப்புறத்திலிருக்கும் மாணாக்கர்கள் குறைந்த கட்டணத்தில் உயர் கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 4 அரசு பொறியியல் கல்லூரிகள், 42 அரசு பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 16 அரசு பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகள், தேசிய சட்டப் பள்ளி மற்றும் இந்திய தகவல் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனங்கள் துவங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு புதிய கல்லூரிகளை துவக்குவதோடு மட்டுமல்லாமல், மாணவர்கள் சிறப்பான கல்விச் சூழலில் பயில வேண்டும் என்பதன் அடிப்படையில், இக்கல்லூரிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டதுடன், புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. எனவே தான், உயர்கல்வியின் மொத்த சேர்க்கைவிகிதத்தில் நாட்டிலேயே நமது மாநிலம் முதன்மை இடத்தைப் பெற்றுள்ளது.

உயர்கல்வித் துறையில் இந்த ஆண்டு செயல்படுத்த உள்ள புதிய திட்டங்களை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

1. பொறியியல் படிப்பு பயிலும் மாணவர்கள் இந்திய பொறியியற் பணித் தேர்வில் இந்திய பொறியியல் பணியில்  தேர்ச்சி பெறச் செய்யும் வகையில், அதற்கான பயிற்சி மையங்கள் சென்னை, தர்மபுரி, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.
2. பல தனியார் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களின் திறன் மேம்படும் வகையில் வெளி நாட்டில் உள்ள கல்லூரிகளில் குறுகிய காலப் பயிற்சி பெற அந்த கல்லூரிகள் வகை செய்கின்றன. இது போன்ற வாய்ப்பு அரசு பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் ஆகும். எனவே, ஆண்டுதோறும் 10 அரசு பொறியியல் கல்லூரிகளில் பயிலும்100 மாணாக்கர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, 15 நாட்கள் தொழில்நுட்பப் பயிற்சி பெறும் பொருட்டு அயல்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பிவைக்கப்படுவர். இத்திட்டம் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
3. உலக அளவில் புகழ் பெற்ற உயர்கல்வி ஆசிரியர்களின் சிறப்பு விரிவுரைகள் மற்றும் தொழிற்சாலைகளில் உள்ள சிறந்த நிபுணர்களின் உரைகளை கேட்டு மாணாக்கர்கள் பயன் அடையும் வகையில் காணொலிக் காட்சி ஒலி-ஒளியக மையம் சென்னையில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் நிறுவப்படும். இம்மையம் தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பயிலும்  மாணாக்கர்களுக்கு இந்த உரைகளை காணொலி மூலம் வழங்கும். இத்திட்டம் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
4. தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் பொருட்களை சிதைக்காமல் மதிப்பீடு செய்யும் முறை, பொருள் சேதமில்லா தரச்சோதனை  எனப்படும். இந்த சேதமில்லா தரச்சோதனை பயிற்சி அளிக்கும் வகையில், மதுரையில் உள்ள தமிழ்நாடு பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரியில் பொருள் சேதமில்லா தரச்சோதனை பயிற்சி மையம் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.
இங்கு ஆண்டொன்றுக்கு 100 பேருக்கு செய்முறை பயிற்சி அளிக்கப்படும். நலிவுற்ற மாணவர்கள் மற்றும் மலைவாழ் மாணாக்கர்கள் 40 முதல் 50 கி.மீ. வரை பயணம் செய்து, கோயம்புத்தூர் அல்லது நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசுக் கல்லூரிகளில் உயர்கல்வி பயில வேண்டியதைத் தவிர்க்கும் பொருட்டு, மேட்டுப்பாளையத்தில் ஒரு அரசு கலை மற்றும், அறிவியல் கல்லூரி சுமார் 8 கோடியே29 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இந்த ஆண்டு துவங்கப்படும்.
5.காஞ்சிபுரம் மாவட்டம்,பெரும்பாக்கத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத் திட்டத்தின் கீழ் 20,376 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இப்பகுதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் +2 வகுப்பில் 4,269 மாணவர்கள் பயின்று வருகின்றனர். எனவே, பெரும்பாக்கத்தில் 8 கோடியே 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இந்த ஆண்டு துவங்கப்படும்.
6. அனைத்துப் பல்கலைக்கழகங்கள் மற்றும் இணைவுக் கல்லூரிகள் மேகக் கணினியத்தில் இணைக்கப்பட்டு மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்களுக்கு பலவித சேவைகள் வழங்கப்படும். இம்மையம் 160 கோடி ரூபாய் செலவில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டு, இச்செயல் திட்டம் 3 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும்.
7. தமிழகம், மோட்டார் வாகன தொழில் வளர்ச்சி மற்றும் வாகன உபரி பொருள் உற்பத்தி ஆகியவற்றில் முன்னிலையில் உள்ளது. எனவே, எரிபொருள் செலவு மற்றும் கரியமில வாயு வெளியீட்டினை குறைக்கவல்ல வாகனம் சார்ந்த ஆராய்ச்சி மிகுந்த பயனுள்ளதாக அமையும். அண்ணா பல்கலைக்கழகத்தில் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மோட்டார் வாகன தொழில்நுட்ப மையம் ஒன்று மோட்டார் வாகன தொழில் நிறுவனங்களுடன் இணைந்து நிறுவப்படும்.
8. அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் திறனை மேம்படுத்த பல்வேறு மாநில, தேசிய மற்றும் உலகளாவிய கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. எனவே, 5,000 பேர் அமரும் வசதி கொண்ட ஒரு பெருங் கூட்டரங்கம் அண்ணா பல்கலைக்கழகத்தில் 50 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.
9. அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் பயிற்சி மையம் ஒன்று அமைக்கப்படும். காப்பீடு உரிமை சார்ந்த அனைத்து தகவல்கள் மற்றும்காப்பீடு உரிமை பெற தேவையான அனைத்து உதவிகளையும் இம்மையம் ஒருங்கிணைக்கும். சிறந்த திட்டங்கள் காப்பீடு உரிமை பெறவும் இம்மையம் உதவி புரியும். நவீன கண்டுபிடிப்புகள் சார்ந்த தகவல்கள், அடைகாக்கும் மையம் பற்றிய  விழிப்புணர்வு, தொழிற்சாலைகளின் வளர்ச்சிக்கு தேவையான ஆராய்ச்சி பற்றிய தகவல்கள் ஆகிய அனைத்தும் இம்மையத்தின் மூலம் அளிக்கப்படும். இந்த மையம் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.
10. தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் மண்டல மையங்கள் மதுரை, கோயம்புத்தூர், திருச்சி மற்றும் தருமபுரி ஆகிய நான்கு மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தால் அளிக்கப்பட்டு வரும் கல்விச் சேவையை மாணவர்கள் எளிதில் பெறும் பொருட்டும், நீண்ட தூரம் பயணம் செய்வதைத் தவிர்க்கவும், இரண்டு புதிய மண்டல மையங்கள் விழுப்புரம் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் 12 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.
11. தற்போது தேசிய ஆசிரியர் கல்வியியல் மன்றம் 15 புதிய ஆசிரியர் கல்வியியல் படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றில் 4 வருட ஒருங்கிணைந்த பாடப் பிரிவுகள் அடங்கும். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தால் 4 வருட ஒருங்கிணைந்த பாடப்பிரிவுகள் இந்த ஆண்டு முதல் கல்வியியல் கல்லூரிகளில் அறிமுகப்படுத்தப்படும்.
12. மதுரை காமராசர் பல்கலைக்கழகம் 77 துறைகளைக் கொண்டு சிறப்புடன் இயங்கி வருகிறது. சுமார் 1.20 லட்சம் மாணவர்கள் இப்பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார்கள். இப்பல்கலைக்கழகத்தில் நலவாழ்வு மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இம்மையத்தினை பல்கலைக்கழகத்தின் பணியாளர்கள், ஆசிரியர்கள், மாணாக்கர்கள் மற்றும் பல்கலைக்கழகத்தைச் சுற்றியுள்ள 100 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

எனவே, நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் சிறந்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுடன் கூடிய ஒரு பல்நோக்குசிறப்பு மருத்துவமனை 4 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும். மேலும், மாணாக்கர்கள் நலனை கருத்தில் கொண்டு, விளையாட்டு உள்அரங்கம் மற்றும் நூலகம் ஆகியவை 6 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

சூரிய மின்ஒளி மற்றும் நிலத்தடி நீர் சேமிப்பு திட்டம், கம்பியில்லா தொடர்பு வசதி ஆகிய வசதிகள் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தித் தரப்படும்.இதைத் தவிர, விடுதிகள் மேம்பாட்டு பணிகள் 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.  தற்போது நான் அறிவித்துள்ள அறிவிப்புகள் உயர்கல்வியின் தரத்தினை மேலும்உயர்த்தவும், ஏழை எளிய மாணாக்கர்கள் வெளிநாடுகளில் பயிற்சி பெறவும், அண்ணாபல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிகள் மேம்பாடு அடையவும் வழி வகுக்கும்.  இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்