முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண் என்ஜினீயர் உமாமகேஸ்வரி கொலை: 3 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்தது சென்னை ஐகோர்ட்

செவ்வாய்க்கிழமை, 23 ஆகஸ்ட் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை  - பெண் என்ஜினீயர் உமாமகேஸ்வரி கொலை வழக்கில் 3 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் என்ஜினீயர் உமா மகேஸ்வரி. சென்னையை அடுத்த சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள டி.சி.எஸ். நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ம் தேதி பணிக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து கேளம்பாக்கம் போலீசில் அவரது தந்தை பாலசுப்பிரமணியன் புகார் செய்தார்.

இந்நிலையில், பிப்ரவரி 22-ம் தேதி சிப்காட் வளாகத்தில் உள்ள முட்புதரில் கழுத்து அறுக்கப்பட்டு, அழுகிய நிலையில் உமா மகேஸ்வரியின் சடலம் கண்டு எடுக்கப்பட்டது. கேளம்பாக்கம் போலீசார் இந்த வழக்கை சரிவர விசாரிக்காததால், சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையில், உமா மகேஸ்வரியை மேற்குவங்காளத்தை சேர்ந்த உத்தம் மண்டல் (வயது23), ராம் மண்டல் (23), உஜ்ஜல் மண்டல் ஆகியோர் கற்பழித்து கொலை செய்தது தெரியவந்தது. உமாமகேஸ்வரி ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்துக் கொண்டு வருவதை பார்த்த 3 வாலிபர்களும், அவரை பின் தொடர்ந்து சென்றுள்ளனர்.

ஆள் நடமாட்டம் இல்லாத இடம் வந்தபோது, உமா மகேஸ்வரியை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று, கற்பழித்துள்ளனர். பின்னர் அவரது ஏ.டி.எம். கார்டு, செல்போன் உள்ளிட்டவைகளை பறித்துக் கொண்டு, அவரை கழுத்து அறுத்து கொலை செய்துள்ளனர். இந்த வழக்கை செங்கல்பட்டு செசன்சு கோர்ட்டு விசாரித்து, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால் 3 வாலிபர்களுக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை எதிர்த்து 3 வாலிபர்களும் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்கை நீதிபதிகள் நாகமுத்து, பாரதிதாசன் ஆகியோர் விசாரித்தனர். அப்போது, சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரியிடமும், அரசு வக்கீலிடமும் நீதிபதிகள் சரமாரியாக கேள்விகள் கேட்டனர். அதற்கு அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. போலீசாரின் இந்த செயலுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். இந்த வழக்கில் 3 வாலிபர்களும் விடுதலையாகும் சூழ்நிலை ஏற்பட்டது.

இதையடுத்து,  ஏற்கனவே இந்த வழக்கில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வக்கீல் மகாராஜாவை, (தற்போது சிறப்பு அரசு பிளீடராக மாற்றப்பட்டு சிவில் வழக்குகளில் ஆஜராகி வருகிறார்) இந்த வழக்கில் ஆஜராகி வாதிடும்படி நீதிபதிகள் கூறினார்கள். இதையடுத்து வழக்கின் சம்பவம், குற்றச்சாட்டை நிரூபிக்கும் சாட்சியங்களை எடுத்துச் சொல்லி சிறப்பு அரசு பிளீடர் மகாராஜா வாதிட்டார். இதையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதிகள் கடந்த 11-ம் தேதி உத்தரவிட்டார்கள்.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. ‘உமா மகேஸ்வரியை கழுத்தை அறுத்துக் கொலை செய்த குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால், மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம். உஜ்ஜல் மண்டல் உள்ளிட்ட 3 வாலிபர்களுக்கு கீழ் கோர்ட்டு வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்கிறோம்’ என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்