முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய தடகள வீராங்கனை ஜெய்ஷா குற்றச்சாட்டு - விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 23 ஆகஸ்ட் 2016      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : ரியோவில் இந்திய அதிகாரிகள் குடிப்பதற்கு தண்ணீர் கூட தரவில்லை என்று இந்திய தடகள வீராங்கனை ஜெய்ஷா குற்றம் சாட்டி உள்ள நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஜெய்ஷா மாரத்தானில் ஓடியவர். 157 வீராங்கனை கலந்து கொண்டதில் 89-வது இடம்பிடித்தார். 42 கிலோ மீட்டர் தொலைவிலான போட்டி முடிந்த போது ஜெய்ஷா மிகவும் சோர்வாக காணப்பட்டார். ரியோ ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் அவருக்கு முதலுதவி வழங்கப்பட்டது. இந்தியா திரும்பிய ஜெய்ஷா இந்திய அதிகாரிகளின் அக்கறையின்மையை வெளிப்படுத்திஉள்ளார்.

இதுதொடர்பாக அவர் செய்தி சேனல்களுக்கு பேட்டி அளித்து உள்ளார். “வெயில் அதிகமாக அடிக்கும்போது நீண்ட தொலைவை கடக்கும் போது அதிகமான தண்ணீர் தேவையானது. பொதுவாக தண்ணீர் 8 கிலோ மிட்டருக்கு அடுத்து வழங்கப்படும், ஆனால் அதன் பின்னர் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் தண்ணீர் தேவைப்படும். மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட பிற வீராங்கனைகளுக்கு வழியில் உணவு கூட வழங்கப்பட்டது. ஆனால் எனக்கு எதுவும் வழங்கப்படவில்லை. இந்திய கொடி அசைக்கப்படுவதை கூட நான் பார்க்கவில்லை. நாங்கள் இந்திய தேசிய கொடியை மிகவும் நேசிப்போம், இது எங்களுக்கு அதிகமான சக்தியை கொடுக்கும்” என்று ஜெய்ஷா கூறி உள்ளார்.

போட்டியில் கலந்து கொண்ட பிற வீராங்கனைகளுக்கு அவர்களது நாட்டு அதிகாரிகள் ஒவ்வொரு 2.5 கிலோ மீட்டர் தொலைவில் மேஜை அமைத்து அவர்களுக்கு திரவ உணவுகளை வழங்கினர். அதிகாரப்பூர்வ ஒலிம்பிக்ஸ் கவுண்டர்கள் 8 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது, அதனை நான் நம்பியிருந்தேன். போட்டி முடிவடைந்ததும் என்னுடைய உடலில் பல்ஸ் இல்லை என்பதை உணர முடிந்தது. இது என்னுடைய இரண்டாவது வாழ்க்கை போன்றது என்று ஜெய்ஷா கூறி உள்ளார்.  அவருடைய நிலை குறித்து இந்திய அதிகாரிகளுக்கு எந்த ஒரு ஐடியாவும் கிடையாது. “மூன்று மணிநேரங்கள் கழித்த பின்னர் அதிகாரிகள் மருத்துவ முகாமிற்கு என்னை பார்க்க வந்தனர்,” என்று ஜெய்ஷா ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து உள்ளார்.

ஜெய்ஷா பெங்களூரு திரும்பியதும் அவருடைய உடல்நிலையை டாக்டர்கள் பரிசீலனை செய்து உள்ளனர். அவரை மருத்துவமனையில் அனுமதிக்கவேண்டிய நிலை காணப்பட்டது, இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்க ஆம்புலன்ஸ் வசதி செய்யப்பட்டது என்று இந்திய விளையாட்டு ஆணையத்தின் டாக்டர் எஸ்ஆர் சரளா கூறிஉள்ளார். ஆனால் ஜெய்ஷா தன்னுடைய சொந்த மாநிலத்திலேயே (கேரளா) சிகிச்சை பெற்று கொள்ள விரும்பி உள்ளார்.  மேலும் மாரத்தான் போட்டிகளில் கலந்து கொள்ள நான் விரும்பியது கிடையாது என்பதையும் ஜெய்ஷா கூறிஉள்ளார். நான் 1500 மீட்டர் அளவில் நடுத்தர தொலைவில் ஓடும் வீராங்கனை. நான் 1500 மீட்டர் விளையாட்டுகளை மட்டுமே விரும்பினேன், நான் மாரத்தான் வேண்டாம் என்றே சொன்னேன். மக்கள் பணத்திற்காக மாரத்தான் ஓடுகிறார்கள், எனக்கு பணத்தின் மீது எல்லாம் நாட்டம் கிடையாது, தன்னுடைய பயிற்சியாளர் தன்னை நீண்ட தொலைவிலான மாரத்தான் போட்டியில் ஓட கட்டாயப்படுத்திவிட்டார் என்று குற்றம் சாட்டிஉள்ளார். இந்திய அதிகாரிகளின் அலட்சியம் குறித்து வேதனையுடன் ஜெய்ஷா பேட்டி அளித்து உள்ளார். தற்போது ஜெய்ஷாவின் குற்றச்சாட்டை தொடர்ந்து, இதுகுறித்து விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்