முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்பெயின் நாட்டின் அலுமினிய பெட்டிகளுடன் சென்னை - பெங்களூர் இடையே அதிவேக ரெயில்

புதன்கிழமை, 24 ஆகஸ்ட் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஸ்பெயின் நாட்டின் புதிய தொழில் நுட்பத்திலான அலுமினிய பெட்டிகளுடன் சென்னையில் இருந்து பெங்களூருக்கு 3 மணி நேரத்தில் செல்லும் அதிவேக ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே திட்டமிட்டுள்ளது.

உலகிலேயே மிக நீளமான ரெயில் பாதையை கொண்ட நாடாக இந்தியன் ரெயில்வே திகழ்கிறது. ரெயில்வே துறையில் பல்வேறு தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருவதால் ரெயில்களின் வேகமும் அதிகரிக்கப்பட்டு வருகிறது.நீண்ட தூரம் செல்லக் கூடிய ரெயில்களின் பயண நேரத்தை குறைக்கும் வகையில் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் முக்கியமான நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் வழித்தடங்களில் ரெயில்களின் வேகத்தை அதிகரித்து பயண நேரத்தை குறைக்க முயற்சி மேற் கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை சென்ட்ரல்- பெங்களூர் இடையே உள்ள பயண நேரத்தை குறைக்க புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

சென்னையில் இருந்து பெங்களூர் 360 கிலோ மீட்டர் தூரமாகும். இந்த தூரத்தை கடக்க 4 மணி நேரம் 40 நிமிடங்கள் சதாப்தி ரெயிலுக்கு ஆகிறது. மற்ற எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு 5 மணி நேரத்திற்கு மேலாகிறது.சென்னையில் இருந்து பெங்களூருக்கு 3 மணி நேரத்தில் செல்லக் கூடிய வகையில் புதிய தொழில் நுட்பத்திலான ரெயில் பெட்டிகளை பயன்படுத்த தெற்கு ரெயில்வே திட்டமிட்டுள்ளது.
ஸ்பெயின் நாட்டில் உள்ள டால்கோ ரெயில் பெட்டிகள் மூலம் இந்த திட்டத்தை நிறைவேற்ற முடியும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.நாட்டின் வடமாநிலங்களில் பல பகுதிகளில் டால்கோ அலுமினிய ரெயில் பெட்டிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எடை குறைவான பலம் மிக்கதாக இந்த பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன.

தற்போது உள்ள ரெயில்வே கட்டமைப்பு வசதிகளை கொண்டு இருக்கின்ற தண்டவாளத்தில் டால்கோ ரெயில் பெட்டிகளை இயக்க முடியும். அதற்கான வாய்ப்புகள் உள்ளன.சிக்னல் மற்றும் ரெயில் பாதைகளில் எவ்வித மாற்றம் செய்ய தேவையில்லை. வட மாநிலங்களில் டெல்லி-மும்பை ராஜ்தானி வழித்தடம், மதுரா-பல்வா வழித்தடங்களில் டால்கோ அலுமினிய ரெயில் பெட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு கொண்டு இருக்கின்றன.

இந்த பெட்டிகள் 130 கிலோ மீட்டர் வேகத்தில் இருந்து 180 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லக் கூடியதாகும்.தயாரிக்கப்படும் அலுமினிய பெட்டிகள் குறைந்த எடை அளவிலும் உயர்ந்த ‘சஸ் பென்சன்’ திறன் கொண்டதாகும். இதனால் வளைவுகளில் மிக எளிதாக டால்கோ அலுமினிய பெட்டிகள் வளைந்து கொடுக்கும் தன்மையுடையது.

மேலும் குறுகிய வளைவுகளில் கூட வேகமாக செல்ல முடிவதால் குறிப்பிட்ட நேரத்திற்குள் அதிகபட்ச வேகத்தில் செல்லலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.சென்னை-பெங்களூர் வழித்தடத்தில் நிறைய வளைவுகள் இருப்பதால் டால்கோ பெட்டிகள் மூலமே அதிவேகத்தில் செல்ல முடியும் என்று தொழில்நுட்ப வல்லுனர்கள் கருதுகிறார்கள்.

விரைவில் இத்திட்டத்தை செயல்படுத்த தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது. வடமாநிலத்தை தொடர்ந்து தென் மாநிலத்தில் தமிழகம்- கர்நாடகாவை இணைக்கும் வகையில் இந்த சேவை தொடங்குவதற்கான வழி முறைகள் ஆராயப்படுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்