முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனவ மாணவர்களுக்கு கடலோர காவல்படை, கப்பற்படையில் சேர பயிற்சி: சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

புதன்கிழமை, 24 ஆகஸ்ட் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, சட்டசபையில் நேற்று, மீனவர்களின் நலனுக்காக பல்வேறு புதிய திட்டங்களை வெளியிட்ட முதல்வர் ஜெயலலிதா, கடலோர காவற்படை மற்றும் இந்திய கப்பற்படை தகுதித் தேர்வுகளில் தேர்ச்சியடைந்து வேலைவாய்ப்பினை பெற மாதம் ரூ.1000 உதவித்தொகையுடன் , 300 மீனவ இளைஞர்களுக்கு, 3 மாத கால பயிற்சி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் சென்னையில் நவீன 'நகரும்' கடல்மீன் உணவகங்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து சட்டசபையில், 110-வது விதியின் கீழ்  முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-

எனது தலைமையிலான அரசு, மீனவர் நலத் திட்டங்கள், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் மீன்வள ஆதாரங்களைப் பாதுகாத்தல் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி மீனவர்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு வழிவகுத்து வருகிறது. கடந்த ஐந்தாண்டுகளில், 35 மீன் இறங்கு தளங்கள் மற்றும் 7 மீன்பிடி துறைமுகங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 14 இடங்களில் மீன் இறங்கு தளங்கள் மற்றும் 3 மீன்பிடி துறைமுகங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், உள்நாட்டு மீன்வளத்தை அதிகரிக்க பல்வேறு உட்கட்டமைப்பு மேம்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. மீன்வளத் துறை சம்பந்தமாக பின்வரும் புதிய அறிவிப்புகளை இந்த மாமன்றத்தில் வெளியிடுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

1. எங்களது தேர்தல் அறிக்கையில் உள்நாட்டு மீன் உற்பத்திக்குஅதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தோம். தமிழ்நாட்டில் உள்நாட்டு மீன் உற்பத்தி 2010-11-ம் ஆண்டு 1.71 லட்சம் டன் என இருந்தது. இது தற்போது 2.4 லட்சம் டன் என அதிகரித்துள்ளது. இதனை 4.5 லட்சம் டன்களாக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதற்குத் தேவையான மீன்குஞ்சு விரலிகள் உற்பத்திக்கு நடவடிக்கை எடுக்கப்படும். நடப்பாண்டில் மீன்வளத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஈரோடு மாவட்டம் பவானிசாகர், தஞ்சாவூர் மாவட்டம் அகரப்பேட்டை மற்றும் திருமங்கல கோட்டை, திருவாரூர் மாவட்டம் நல்லிக்கோட்டை, தேனி மாவட்டம் மஞ்சளாறு மற்றும் திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு ஆகிய 6 இடங்களில் மீன்குஞ்சு உற்பத்தி மற்றும் வளர்ப்புப் பண்ணைகள் 13.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். இதனால் ஒவ்வொரு வருடமும் கூடுதலாக சுமார் இரண்டு கோடி மீன்குஞ்சு விரலிகள் உற்பத்தி செய்ய இயலும்.

2. கடல் மீனவர்கள் தங்களது மீன்பிடி கலன்களைப் பாதுகாப்பாக நிறுத்துவதற்கும், பிடித்து வரும் மீன்களை சுகாதாரமான முறையில் கரை இறக்கிடவும், மீன் ஏலக் கூடம், வலை பழுது பார்க்கும் மையம், குளிரூட்டப்பட்ட கிடங்கு ஆகிய அனைத்து வசதிகளுடன்கூடிய மீன் இறங்கு தளங்கள் திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு, திருவாரூர் மாவட்டம் ஜாம்பவானோடை, தஞ்சாவூர் மாவட்டம் கரையூர்தெரு தூத்துக்குடி மாவட்டம் கொம்புத்துறை மற்றும் ராமநாதபுரம் மாவட்டம், மோர்பனை ஆகிய 5 இடங்களில் 9.77 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். இந்த இடங்களில் மீன் இறங்கு தளங்கள்அமைப்பதன் மூலம் 1,379 நாட்டுப் படகுகள் பாதுகாப்பாக நிறுத்துவதற்கு வழிவகை செய்ய இயலும்.

3. 2004-ம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை மற்றும் ‘நீலம்’ ‘தானே’ ஆகிய புயல்களுக்கு பின்னர் கடலின் நீரோட்டம் மற்றும் அலைகளின் தாக்கம் சரியாக கணிக்க இயலாததாக உள்ளது. அதன் விளைவாக துறைமுகங்கள் மற்றும் ஆற்றுமுகத்துவாரங்களில் மணல் மேடுகள் உருவாகி, கடல் மீனவர்கள் தங்களது படகுகளை கடலுக்குள் செலுத்த சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே, கடந்த 5 ஆண்டுகளில் ஐந்து ஆற்று முகத்துவாரங்களில் பராமரிப்பு, தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நடப்பு ஆண்டில் கடலூர் மாவட்டம் முதுநகர், நாகப்பட்டினம் மாவட்டம் பழையாறு மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மூன்று மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் கடலூர் மாவட்டம் வெள்ளாறு, நாகப்பட்டினம் மாவட்டம் பழையாறு, வெட்டாறு ஆகிய மூன்று ஆற்று முகத்துவாரங்களில் பராமரிப்பு தூர்வாரும் பணிகள் 18 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.

4. சென்னை மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள சேத்துப்பட்டு ஏரி 42 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு பொழுது போக்கு தூண்டில் மீன்பிடிப்பு, நடைப் பயிற்சி பாதை, படகு குழாம், குழந்தைகள் விளையாட்டுத் திடல், பன்மாடி வாகன நிறுத்தும் கூடம் ஆகிய வசதிகளுடன் கூடிய பசுமை பூங்கா உருவாக்கப்பட்டு, என்னால் 27.2.2016 அன்று துவக்கி வைக்கப்பட்டது. இப்பசுமை பூங்கா பொதுமக்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளதுடன் அப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டத்தினை செறிவூட்டிடும் விதமாகவும் அமைந்துள்ளது. பார்வையாளர்களை இப்பூங்காவிற்கு மேலும் ஈர்க்கும் நோக்கில், சூரியமின் வசதியுடன் கூடிய மீன் காட்சியகம் மற்றும் குளிர்சாதன கவிகை மாடத்தில் முப்பரிமாண காணொளிகளை காட்சிப்படுத்தும் மெய்நிகர காட்சியகமும் 6 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் நடப்பாண்டில் அமைக்கப்படும்.

5. தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தின் மூலம் மீனவ மகளிர் சுய உதவிக் குழுக்கள் பயன்பெறும் வகையில், பல்வேறு மீன் உணவுப் பொருட்களை தயாரித்திட அவர்களுக்குப் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பினை உருவாக்கிடவும், பொதுமக்களுக்கு புரதச்சத்து நிறைந்த ருசியான தரமான மீன் உணவுப் பொருட்கள் கிடைத்திடும் வகையிலும், சுய உதவிக்குழு மகளிர் பயன்பெறும் வகையில் தங்கும் வசதிகளுடன் கூடிய பயிற்சிமையம் மற்றும் உடனடியான சமையலுக்கும், உடனடியாக உண்பதற்கும் என்பதற்கு உகந்த வகையில் கடல் மீன் உணவு வகைகளை தயாரித்திட ஒரு மைய சமையலறைக் கூடம் 8 கோடியே 32 லட்சம் ரூபாய் செலவில் காசிமேடு பகுதியில் அமைக்கப்படும். மேலும், கடல் மீன் உணவுகள் பொதுமக்களுக்கு சுகாதாரமான முறையில், நியாயமான விலையில், சென்னை மற்றும் மாமல்லபுரம் ஆகிய இடங்களில் விற்பனை செய்திட 1 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் இரண்டு நவீன நகரும் கடல்மீன் உணவகங்கள் அமைக்கப்படும்.

மீனவ சமுதாயத்தைச் சார்ந்த பனிரெண்டாம் வகுப்பு வரை படித்த இளைஞர்கள் மீன்வளம் சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பினை பெற்றிட ஏதுவாக பல்வேறு பயிற்சிகளையும், திட்டங்களையும் எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. எனினும், இந்திய கடலோரக் காவற்படை மற்றும் இந்திய கப்பற்படையில் பணிபுரிவதற்கான உடற் தகுதி மற்றும் கடற்பயண திறமைகளை பெற்றிருந்தும், மீனவ சமுதாயத்தைச் சார்ந்த படித்த இளைஞர்கள் முறையான வழிகாட்டுதல்களும், பயிற்சிகளும் இல்லாததால், அந்த வாய்ப்புகளை பெற இயலாத சூழ்நிலையில் இருந்து வருகின்றனர். எனவே, மீனவ சமுதாயத்தைச் சார்ந்த பனிரெண்டாம் வகுப்பு அல்லது அதற்கு மேல்படித்த ஆர்வமுள்ள இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிப்பதன் மூலம், அவர்கள் இந்திய கடலோர காவற்படை மற்றும் இந்திய கப்பற்படை ஆகியவற்றால் நடத்தப்படும் தகுதித் தேர்வுகளில் எளிதாக தேர்ச்சியடைந்து வேலைவாய்ப்பினை பெற இயலும். எனவே, ஆண்டு தோறும் 300 மீனவ இளைஞர்களுக்கு, 3 மாத கால பயிற்சி வழங்கப்படும். பயிற்சியின் போது அவர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும். இந்த திட்டம் ஒரு கோடியே 4 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும். என்னால் தற்போது அறிவிக்கப்பட்ட திட்டங்களின் பயனாக மீன்பிடி உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுவதுடன், மீனவர் வாழ்வாதாரமும் மேம்படும் என்பதைத்தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அறிவிப்பில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்