முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல் ரகசியங்கள் கசிந்த விவகாரம்: : பிரான்ஸ் விசாரணை நடத்த இந்தியா வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 25 ஆகஸ்ட் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல் ரகசியங்கள் கசிந்த பிரச்சினை குறித்து, பிரான்ஸ் போர் தளவாடங்கள் இயக்குநரகத்தில் இந்தியா முறையீடு செய்துள்ளது. இதுகுறித்து முழு விசாரணை நடத்தி அதன் தகவல்களை அளிக்கும்படியும் இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் டி.சி.என்.எஸ். நிறுவனத்தின் தொழில்நுட்பத்துடன், மும்பையில் உள்ள மசாகான் டாக் நிறுவனத்தில் ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கிக் கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதன் ரகசியங்கள் கசிந்துள்ளதால், இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பிரான்ஸ் அரசின் போர்த் தளவாடங்கள் இயக்குநரகத்திடம் இந்திய கப்பல் படை முறையிட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய கப்பல் படை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல் ரகசியங்கள் கசிந்தது குறித்து கப்பல் படைக்குள் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஆவணங்கள் பாதுகாப்பு விஷயத்தில் தவறு நடந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை. அந்த ரகசியங்கள் வெளிநாட்டில் இருந்துதான் கசிந்திருக்க வேண்டும்.‘தி ஆஸ்திரேலியன்’ பத்திரிகை வெளியிட்டுள்ள ஆவணங்களை கவனமாக ஆய்வு செய்து வருகிறோம். எனினும் இதனால் உள்நாட்டு பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. ஆவணங்கள் கசிந்த விவகாரம் குறித்து பிரான்ஸ் அரசின் போர்த் தளவாடங்கள் இயக்குநரகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம்.

தற்போது வெளியாகி உள்ள ஆவணங்களின் உண்மை தன்மையை உடனடியாக ஆராயும்படி தூதரகம் மூலம் பிரான்ஸ் அரசுக்கு தெரியப்படுத்தி உள்ளோம். இதுகுறித்து உடனடியாக தீவிர விசாரணை நடத்தி, அதில் கிடைக்கும் தகவல்களை இந்தியாவுக்கு அளிக்கும்படி பிரான்ஸ் அரசை கேட்டுக் கொண்டுள்ளோம்.இவ்வாறு இந்திய கப்பல் படை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இதற்கிடையில், ஸ்கார்பீன் கப்பல் ரகசியங்கள் கசிந்தது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்த, மத்திய பாதுகாப்புத் துறை மற்றும் கப்பல் படை இணைந்து உயர்மட்ட குழுவை அமைத்துள்ளன. இதனிடையே, நீர்மூழ்கி கப்பல் ரகசியம் வெளியானதில் பிரான்ஸ் நாட்டின் முன்னாள் கடற்படை அதிகாரிக்கு தொடர்பு இருக்கலாம் என பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

அப்படி செய்தவர் அந்த நேரத்தில் டி.சி.என்.எஸ். நிறுவனத்தின் சப்காண்ட்ராக்டராக இருந்துள்ளார் என்று "தி ஆஸ்திரேலியன்" பத்திரிக்கை தெரிவித்துள்ளது. இதனிடையே இதுகுறித்து தீவிர விசாரணை நடந்து வருவதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது. ஆனால், நாட்டின் பாதுகாப்பு விவகாரத்தில் மத்திய அரசு மெத்தனமாக இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago