முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் மதுவிலக்கு சாத்தியமில்லை : துணை முதல்வர் சிசோடியா திட்டவட்டம்

வியாழக்கிழமை, 25 ஆகஸ்ட் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - டெல்லியில் மதுவிலக்கு சாத்தியமில்லை என்று துணை முதல்வர் மணிஷ் சிசோடியா திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
டெல்லியில் சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த திங்கள் கிழமை தொடங்கியது. இதன் இரண்டாவது நாளில் குறுகிய விவாதம் ஒன்றுக்கு மணிஷ் சிசோடியா பதில் அளித்தார். டெல்லியில் மதுக்கடைகள் அதிகரித்து விட்டதாக எழுந்த புகாருக்கு அப்போது அவர் விளக்கம் அளித்தார்.

அவர் பேசும்போது, “டெல்லியில் ‘எல்-6’ எனப்படும் சில சிறிய வகை மதுக்கடைகளுக்கு மட்டும் ஷாப்பிங் மால்களில் அனுமதி தரப்பட்டுள்ளது. அதேசமயம் பெரிய மதுக்கடைகளின் எண்ணிக்கை எங்கள் ஆட்சியில் குறைந்துள்ளது. ஆனால் சிலர் இதற்கு மாறான தகவலை மக்களிடையே பேசி வருகின்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. டெல்லி அரசின் வருவாய் அதிகரித்திருப்பது உண்மை. மதுக்கடைகள் மூலம் அரசுக்கு கிடைத்த வருவாய் கணக்கில் காட்டப்படாமல் ஏமாற்றப்பட்டு வந்தது.

இதை எங்கள் அரசு கண்டறிந்து நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் இந்த வருவாய் அதிகரித்துள்ளதே தவிர, கூடுதல் மது விற்பனையால் அல்ல. நாங்கள் அரசு நடத்த, மது விற்பனையால் கிடைக்கும் லாபத்தில் ஒரு பைசா கூட எங்களுக்கு தேவையில்லை.  தேசிய அளவில் அமல்படுத்தினால் ஒழிய டெல்லியில் மதுவிலக்கு சாத்தியமில்லை. பீகாரில் மதுவிலக்கை அமல்படுத்தி யிருப்பது வரவேற்கத்தக்கது. எங்கள் அரசும் பூரண மது விலக்கை வரவேற்கிறது. ஆனால் அதற்கு முன் அதன் தாக்கம் மீதான விரிவான ஆய்வு தேவை” என்றார்.

இதற்கு முதல்நாள் மணிஷ் சிசோடியாவின் முன்னாள் சகாக்களான யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண் ஆகியோர் நடத்தும் ‘ஸ்வராஜ் அபியான்’ சார்பில் டெல்லியில் ஒரு கூட்டம் நடைபெற்றது. இதில் மதுக்கடைகளின் எண்ணிக்கையை டெல்லி அரசு அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு பதில் அளிக்கும் வகையிலேயே சட்டப்பேரவையில் மணிஷ் சிசோடியா இவ்வாறு பேசினார். ஆம் ஆத்மி கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அதன் நிறுவனர்களான யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண் ஆகியோர் புதிதாக ஓர் அரசியல் கட்சியும் தொடங்க உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்