முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகத்திற்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த இடைக்கால மனு சுப்ரீம்கோர்ட்டில் வரும் 2-ம் தேதி விசாரணை

வெள்ளிக்கிழமை, 26 ஆகஸ்ட் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - தமிழகத்திற்கு, கர்நாடகா 50 டி.எம்.சி. அடி காவேரி தண்ணீரை திறந்துவிட உத்தரவிடக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த இடைக்கால மனு சுப்ரீம்கோர்ட்டில் வரும் 2-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. காவேரி நடுவர்மன்றத் தீர்ப்பின்படி, காவேரி நதியில் இருந்து கடந்த 19-ம் தேதிவரை தமிழகத்திற்கு தரவேண்டிய 50 டி.எம்.சி அடி தண்ணீரை திறந்துவிடக்கோரி கர்நாடக அரசுக்கு உத்தரவிட வலியுறுத்தி, முதல்வர் ஜெயலலிதா அறிவுறுத்தலின்படி, சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனு, வரும் 2-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், கடந்த 18-ம் தேதி, பேரவை விதி 110-ன் கீழ் அறிக்கை ஒன்றை அளித்த முதல்வர் ஜெயலலிதா, காவேரி நடுவர்மன்ற இறுதி ஆணையின்படி, கர்நாடக அரசு, தமிழகத்திற்கு உரிய நீரை விடுவிக்க முன்வராததால், காவேரி நீரில் தமிழகத்தின் பங்கைப் பெற்றிட, சுப்ரீம்கோர்ட்டில் இடைக்கால மனு ஒன்றை, உடனடியாகத் தாக்கல் செய்ய தாம் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.  அதன்படி, முதல்வர் ஜெயலலிதா அறிவுறுத்தலின்பேரில், தமிழக அரசு சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் கடந்த 22-ம் தேதி இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு தமிழக அரசு சார்பில் நேற்று மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தே ஆஜராகி வாதிட்டார்.

கர்நாடக அரசு தமிழகத்திற்கு காவேரியில் தண்ணீர் திறந்துவிட தொடர்ந்து மறுத்து வருவதாகவும், எனவே, இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு வரும் 2-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் அறிவித்தனர். முன்னதாக, நேற்று முன்தினம் பெங்களூரில் தமிழக விவசாயிகளை சந்தித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட இயலாது என்று தெரிவித்தார். இதையடுத்து, கர்நாடகத்தின் சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் வாதாடும் மூத்த வழக்கறிஞர் நாரிமன் முதல்வர் சித்தராமையாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, தமிழ்நாட்டிற்கு உரிய பங்கு நீரை திறந்து விட வேண்டும்.

இல்லாவிட்டால் சட்டச்சிக்கல் ஏற்படும் என்றும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும் என்றும், சித்தராமையாவுக்கு அறிவுரை வழங்கினாராம். ஆனாலும் கூட அவரது அறிவுரையை சித்தராமையா ஏற்கவில்லை என தெரியவந்துள்ளது. இந் நிலையில், கர்நாடகத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், ஒகேனக்கலுக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கர்நாடக அரசு முரண்டு பிடித்தாலும், இயற்கை அன்னை தமிழகத்தை கைவிட மாட்டாள் என்பதற்கு இதுவே உதாரணமாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்