முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 1ம் தேதி வெளியிடப்படும்

சனிக்கிழமை, 27 ஆகஸ்ட் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை  - தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 1ம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையர் சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் வருகிற அக்டோபர் மாதம் 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. எனவே அதற்கு முன்னதாக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான முயற்சிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு உள்ளது.தமிழகத்தில் 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், 12,524 ஊராட்சிகள் உள்ளன.

இவற்றில் மேயர், துணை மேயர், தலைவர், துணைத் தலைவர், கவுன்சிலர், வார்டு உறுப்பினர் உள்ளிட்ட 1.50 லட்சம் பதவிகள் உள்ளன. இந்த உள்ளாட்சிப் பதவிகளுக்கான தேர்தல் வரும் அக்டோபரில் நடைபெற உள்ளது.இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள, மாநிலத் தேர்தல் ஆணையர் பி.சீத்தாராமன், ஒவ்வொரு மாவட்டங்களிலும், மாவட்ட ஆட்சியர் தலைமையில், ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறார்.உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு தேர்தல் ஆணையர் சீத்தாராமன் தலைமை வகித்தார். கூட்டத்தில், வாக்குச்சாவடிகளுக்குப் பணியாளர்களை நியமிப்பது, வாக்காளர் பட்டியலை பகுதி வாரியாக தேசிய தகவல் மற்றும் இணையதளத்தில் பதிவிடுவது குறித்த ஆலோசனைகள் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது.அதன்பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் ஆணையர் சீத்தாராமன், தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல், செப்டம்பர் 1ஆம் தேதி வெளியிடப்படும். உள்ளாட்சித் தேர்தலுக்காக வாக்குச்சாவடி மையங்களை தேர்வு செய்வது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் தேவையைக் கணக்கிடுதல் உள்ளிட்ட முதல்கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளது என்று தெரிவித்தார்.

அக்டோபர் 23ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்துக்கொள்ளலாம். அதன் பின்னர் இணைப்பு பட்டியல் வெளியிடப்படும். அதில் பெயர் இருப்பவர்கள் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்கலாம்.உள்ளாட்சி தேர்தலில் ஒரு வாக்காளர் குறைந்தபட்சம் 4 வாக்குகள் பதிவு செய்ய உள்ளதால் பல வண்ண வாக்காளர் பதிவு சீட்டு பயன்படுத்தப்பட உள்ளது. மேலும் அதற்காக வாக்குப்பதிவு அதிகாரிகளும் தேவையான அளவில் பணி அமர்த்தப்பட உள்ளனர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.வாக்குப்பதிவு அன்று வாக்காளர்களின் வசதிக்காக வாக்குச்சாவடியில் பந்தல் அமைக்கவும், மாற்றுத்திறனாளி, முதியோர் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு சக்கர நாற்காலிகள் வசதி செய்து கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த தேர்தலில் உள்ளாட்சி அலுவலர்கள் மட்டுமல்லாமல் காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.இதனிடையே தமிழக வாக்காளர் பட்டியலில் 3.75 லட்சம் இரட்டை பதிவுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அலுவலர்களைக் கொண்டு வீடுவீடாக சரிபார்க்கும் பணியை தேர்தல் துறை தொடங்கியுள்ளது.தமிழகத்தில் சட்டசபைத் பொதுத் தேர்தல் கடந்த மே மாதம் முடிந்துள்ளது. அடுத்ததாக உள்ளாட்சித் தேர்தலுக்கு வாக்களிக்க மக்கள் தயாராகி வருகின்றனர்.இந்நிலையில் வாக்காளர் பட்டியலை திருத்தும் பணியில் தேர்தல் ஆணையம் இறங்கியுள்ளது. தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது.

அதில், 5.82 கோடி வாக்காளர்கள் இருந்தனர்.தேர்தல் நெருங்கிய நிலையில், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், வாக்காளர்கள் பட்டியலில் இறந்தவர்கள் பெயர், இரட்டைப்பதிவுகள் அதிகளவில் இருப்பதாக புகார் தெரிவித்தன.தேர்தல் ஆணையத்துக்கும், தமிழகம் வந்த தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியிடமும் ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டது. 19 முதல் 23 வயதுக்கு உட்பட்ட வாக்காளர்கள் பதிவு எண்ணிக்கையும் மிகக் குறைவாக இருந்ததால், புதிய வாக்காளர்கள் சேர்க்கை, வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்காக வீடு, வீடாக வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இதனால், 3.70 லட்சத்துக்கும் மேற்பட்ட இரட்டை பதிவுகள், இறந்தவர்கள் பெயர்கள் நீக்கப்பட்டன.தொடர்ந்து, மே 16ம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. வாக்குப்பதிவு முடிந்த அடுத்த மாதத்தில் இருந்து வழக்கமாக புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் மற்றும் வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.இந்நிலையில், வரும் அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வாக்காளர் பட்டியல், மாநில தேர்தல் ஆணையத்திடம் ஏற்கெனவே வழங்கப்பட்டுவிட்டது. சட்டசபைத் தேர்தல் போல், வாக்காளர் பட்டியல் தொடர்பான குழப்பம் இதிலும் வந்துவிடக் கூடாது என்பதால், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago