முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானியர்களின் தூண்டுதலே காஷ்மீர் கலவரத்திற்கு காரணம் - முதல்வர் மெகபூபா முப்தி ஆவேசம்

சனிக்கிழமை, 27 ஆகஸ்ட் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் கைகளில் கற்களை ஏந்த காரணமே பாகிஸ்தானியர்களின் தூண்டுதல்தான் என்று அம்மாநில முதல்வர் மெகபூபா முப்தி சாடியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் 50 நாட்களாக வன்முறை நீடித்து வருகிறது. அம்மாநிலத்தின் ஒட்டுமொத்த இயல்பு வாழ்க்கையுமே அடியோடு முடங்கியுள்ளது. இந்த நிலையில் அம்மாநில முதல்வர் மெகபூபா முப்தி நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார். இச்சந்திப்பின் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

காஷ்மீர் நிலவரம் குறித்து பிரதமர் கவலை கொண்டுள்ளார். இனியாவது இங்கு ரத்தம் சிந்துவது நிறுத்தப்பட வேண்டும் என விரும்புகிறார். பதவியேற்பு விழாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை அழைக்கும் தைரியமான ஒரு முடிவை எடுத்தவர் நம் பிரதமர். அதேபோல் லாகூருக்கு அதிரடி பயணம் மேற்கொண்டார். ஆனால் பதான்கோட்டில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தற்போது காஷ்மீரில் பற்றி எரியும் நெருப்புக்கு எண்ணெய் ஊற்றிக் கொண்டிருக்கிறது பாகிஸ்தான். காஷ்மீர் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் பாகிஸ்தானுக்குச் சென்ற நமது உள்துறை அமைச்சரை ஒரு விருந்தினருக்கு அளிக்க வேண்டிய மரியாதையைக் கூட புறக்கணித்தது.

காஷ்மீர் மக்கள் மீது சிறிதளவேனும் அக்கறை இருக்குமானால் அங்குள்ள இளைஞர்களை பாகிஸ்தானும், பிரிவினைவாதிகளும் தூண்டிவிடாமல் இருக்கட்டும். பாகிஸ்தான் தூண்டுதலின் பேரிலேயே இளைஞர்கள் படைகளுக்கு எதிராக கையில் கற்களை ஏந்துகின்றனர். முன்னாள் முதல்வரும், எனது தந்தையுமான முப்தி முகமது சயீது, காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண நாட்டை ஆளும் பிரதமர் 3-ல் இரண்டு பங்கு பெரும்பாண்மை கொண்டவராக இருக்க வேண்டும் எனக் கூறுவார். காஷ்மீர் பிரச்சினைக்கு பிரதமர் நரேந்திர மோடி நிரந்தர தீர்வு காண்பார் என நம்புகிறேன். மோடி தலைமையிலான ஆட்சியில் காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படாவிட்டால் இனி எப்போதுமே தீர்வு ஏற்படாது.

காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.காஷ்மீர் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற தனிநபர்கள் கொண்ட ஒரு குழுவை பேச்சுவார்த்தைக்காக மத்திய அரசு அமைக்க வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன்.  இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்