முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்டளைக்கு அடிபணிய மறுத்த முன்னாள் அமைச்சர் சுட்டுக்கொலை: வடகொரிய அதிபர் வெறிச்செயல்

செவ்வாய்க்கிழமை, 30 ஆகஸ்ட் 2016      உலகம்
Image Unavailable

சியோல்  - வடகொரியா நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன்-னின் கட்டளைக்கு அடிபணிய மறுத்த முன்னாள் அமைச்சர் மற்றும் மூத்த அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டு, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தென்கொரியா நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. கிழக்காசிய கண்டத்தின் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கிய நாடான வடகொரியா, கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. இருப்பினும், கடந்த 2006-ம் ஆண்டு முதல் உலக நாடுகளின் எதிர்ப்பினை பொருட்படுத்தாமலும், சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்தும் அணு ஆயுத சோதனைகளை வடகொரியா தொடர்ந்து நடத்தி வருகிறது.

வடகிழக்கு ஆசிய நாடுகளான தென்கொரியாவும், வடகொரியாவும் தங்களது ஆயுத பலத்தை நிலைநாட்ட பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. சக்திவாய்ந்த அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு மற்றும் அணுஆயுதங்களை நீண்டதூரம் சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணைகள் ஆகியவற்றை வடகொரியா அவ்வப்போது பரிசோதித்து வருகிறது.  இந்நிலையில், வடகொரியா நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன்-னின் கட்டளைக்கு அடிபணிய மறுத்த முன்னாள் மந்திரி மற்றும் ஒரு மூத்த அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டு, அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தென்கொரியா நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக, தென்கொரியாவில் இருந்து வெளியாகும் பிரபல நாளேடான ‘ஜோங்அங் ஈபோ’ வெளியிட்டுள்ள செய்தியில் வடகொரியா நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன்-னின் கட்டளைக்கு அடிபணிய மறுத்த அந்நாட்டின் முன்னாள் வேளாண்மைத்துறை மந்திரி ஹுவாங் மின் மற்றும் கல்வித்துறையின் மூத்த அதிகாரி ரி யோங் ஜின் ஆகியோரை பியாங்யாங் நகரில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரி வளாகத்தில் வைத்து, அதிபரின் படைகள் சமீபத்தில் சுட்டுக்கொன்று, மரண தண்டனையை நிறைவேற்றியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செய்திக்கு வடகொரியா சார்பில் இதுவரை மறுப்பு அறிக்கை ஏதும் வெளியிடப்படவில்லை. இதற்கு முன்னரும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்-னின் மாமா ஜாங் சாங் தாயேக் மற்றும் அந்நாட்டின் முன்னாள் ராணுவ மந்திரி ஹியூன் யாங் சோல் ஆகியோருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக கடந்த ஆண்டு தென்கொரியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அந்த செய்திகளை அப்போது வடகொரியா திட்டவட்டமாக மறுக்கவில்லை. எனினும், பின்நாட்களில் அந்த தகவல்கள் உண்மைதான் என வெளியுலகுக்கு தெரியவந்தது நினைவிருக்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்