முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்து கவர்னர் உத்தரவு: பிரதமர் மீது கெஜ்ரிவால் பாய்ச்சல்

செவ்வாய்க்கிழமை, 30 ஆகஸ்ட் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - டெல்லி அரசின் முக்கிய அதிகாரிகளை இடமாற்றம் செய்து கவர்னர் நஜீப் ஜங் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கவர்னரை வைத்து டெல்லியை சீரழிக்க தன்னால் இயன்ற அனைத்தையும் செய்ய பிரதமர் மோடி தீர்மானித்துள்ளதாக விமர்சித்துள்ளார். மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி, கோவா போன்ற யூனியன் பிரதேசங்களில் முதல்வரையை காட்டிலும் கவர்னர்களுக்கே முழு அதிகாரம் உள்ளது என சமீபத்தில் டெல்லி கோர்ட் தீர்ப்பளித்தது. இதையடுத்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலால் நியமிக்கப்பட்ட பல துறைகளின் மூத்த அதிகாரிகளை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் உத்தரவிட்டுள்ளார்.

அவ்வகையில், டெல்லி பொதுப்பணித்துறை, சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரத்துறையில் உள்ள மூத்த அதிகாரிகள் வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு, அவர்கள் வகித்துவந்த பதவிகளில் புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கவர்னரின் இந்த உத்தரவுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கவர்னரை மட்டுமின்றி பிரதமர் நரேந்திர மோடியையும் அவர்கள் நேரடியாக தாக்கி கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ’முதல்வருக்கும் துறைசார்ந்த அமைச்சர்களுக்கும் கோப்புகளை காண்பிக்காமல் அதிகாரிகளை கவர்னர் அதிரடியாக மாற்றியுள்ளார். இதுதான் மோடிபாணி ஜனநாயகமா? என்பது தெரியவில்லை. கவர்னரை வைத்து டெல்லியை சீரழிக்க தன்னால் இயன்ற அனைத்தையும் செய்ய மோடி தீர்மானித்துள்ளார்’ என குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவும், ‘பிரதமர் மோடி தொலைபேசியில் போட்ட உத்தரவை ஏற்று இந்த பணியிட மாற்றங்கள் நடைபெற்றதாக எங்களுக்கு தெரியவந்துள்ளது. மோடி எந்த எல்லைக்கும் போவார் என்பது எங்களுக்கு தெரியும்.டெல்லியில் சுகாதாரம் மற்றும் கல்வியின் தரம் மோசமான நிலையை எட்டினால், ஆம் ஆத்மி கட்சியின் தலைமையிலான ஆட்சிக்கு இடையூறுகளை ஏற்படுத்திவரும் மோடிதான் பொறுப்பேற்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்