முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்.எஸ்.ஜி.- தென் சீன கடல் பிரச்சினை விவகாரம் : இந்தியா- அமெரிக்கா ஏகமனதான முடிவு

புதன்கிழமை, 31 ஆகஸ்ட் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - அணு விநியோக குழு(என்.எஸ்.ஜி.) மற்றும் தென் சீன கடல் பிரச்சினை குறித்து  இந்தியா - அமெரிக்கா இடையே நேற்று விவாதிக்கப்பட்டது. இந்த பிரச்சினையில் சீனா சர்வதேச சட்டத்தை மதிக்க வேண்டும் என இரு நாடுகளும் ஏகமனதாக வலியுறுத்தின.  இந்தியா-அமெரிக்கா இடையே வருடம் தோறும்  ராஜிய மற்றும் வர்த்தத்துறை பேச்சு வார்த்தை நடக்கிறது. இந்த ஆண்டிற்கான பேச்சு வார்த்தை தலைநகர் டெல்லியில் நடந்தது. இந்த பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ள 3 நாள் பயணமாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி மற்றும் அந்த நாட்டின் வர்த்தகத்துறை அமைச்சர் பென்னி பிரிட்ஸ்கர் ஆகியோர் டெல்லி வந்தனர்.

இந்த பேச்சு வார்த்தை நடந்த நிலையில் நேற்று இருநாடுகளும் கூட்டாக அறிக்கை வெளியிட்டன. அதில் கூறியிருப்பதாவது, தென் சீன கடல் பகுதியில் சர்வதேச சட்டத்தை சீனா கடைபிடிக்க வேண்டும். தென் சீன கடல் பகுதி அந்த தேசத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல என்று சர்வதேச கோர்ட் தெரிவித்துள்ளது. அதனை சீனா மதிக்க வேண்டும். அந்த கடல் பகுதியில்  தடையற்ற சட்டப்பூர்வமான வர்த்தக போக்குவரத்து நடக்க வேண்டும்.

கடந்த 2008ம் ஆண்டு மும்பையில்  நடந்த தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகள் மற்றும் 2016ம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் பதன் கோட் விமானப்படை தளத்தில் தாக்குதல் நடத்திய தீவரவாதிகளை நீதியின் முன்பாக  பாகிஸ்தான் நிறுத்த வேண்டும். பாகிஸ்தானில்  ஐ.எஸ். தீவிரவாத இயக்கம், அல் கொய்தா, லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது, ஆகிய தீவிரவாத இயக்கங்கள் முகாம்களை சுதந்திரமாக நடத்தி வருகின்றன. தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் அந்த தீவிரவாத முகாம்களை அழிக்க வேண்டும்.

அணு விநியோகக்குழுவில் இந்தியா இடம் பெறுவதை சீனா கடந்த ஜூலை மாதம் சியோலில் நடந்த என்.எஸ்.ஜி கூட்டத்தில் எதிர்த்தது. இருப்பினும் இந்தியா என்.எஸ்.ஜி குழுவில் இடம் பெறுவதை அமெரிக்கா ஆதரிக்கிறது. அந்த குழுவில் இணைவதை இந்தியாவும் விரும்புகிறது.இவ்வாறு அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்