முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போர்க் குற்றங்களை இழைக்கிறது தீவிரவாத பாகிஸ்தான்: ஐ.நா. சபையில் இந்தியா முறையீடு

வியாழக்கிழமை, 22 செப்டம்பர் 2016      உலகம்
Image Unavailable

நியூயார்க்  - பாகிஸ்தானை 'தீவிரவாத தேசம்' என்று குறிப்பிட்ட இந்தியா, தீவிரவாதத்துக்கு உறுதுணை புரிவது என்ற தமது 'நீண்ட காலக் கொள்கை'யின் அடிப்படையில் இந்தியர்களுக்கு எதிராக போர்க் குற்றங்களை இழைப்பதாக கடுமையாக சாடியுள்ளது. நியுயார்க்கில் நடைபெற்று வரும் ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசிய சில மணி நேரங்களில், அவருக்கு பதிலளிக்கும் விதமாக இந்திய தரப்பில் இவ்வாறு குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டன. ஐ.நா.வால் தீவிரவாதிகள் என வரையறுக்கப்பட்டவர்கள் பாகிஸ்தான் தெருக்களில் சுதந்திரமாக உலா வருவதாகவும், உள்நாட்டு அரசின் ஆதரவுடன் அவர்கள் இயங்கி வருவதாகவும் இந்தியா கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் தற்போதைய நிலை தொடர்பான நவாஸ் ஷெரீபின் கருத்துகளுக்கு கடுமையான பதிலடி தரும் விதமாக பேசிய ஐ.நா.வுக்கான இந்தியச் செயலர் ஏனம் கம்பீர், "தீவிரவாதம் என்பதே மிக மோசமான மனித உரிமை மீறல்" என்று பாகிஸ்தானை பகிரங்கமாகத் தாக்கிப் பேசினார். அவர் மேலும் கூறும்போது, "போர்க் குற்றங்களுக்கு அடித்தளமாக அமைத்து செயல்பட்டு வருவது ஏற்புடையது அல்ல. தீவிரவாதத்துக்கு ஊக்கமளித்து உறுதுணையாக இருந்து வரும் பாகிஸ்தானால் எங்கள் நாடும், எங்களின் அண்டை நாடுகளும் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றன. எங்கள் பகுதி முழுவதுமே பரவலாக பாதிக்கப்பட்டுள்ளது" என்றார்.
சர்வதேச நாடுகளில் இருந்து கிடைக்கக் கூடிய நிதியுதவிகளை, தங்கள் அண்டை நாடுகளுக்கு எதிராக செயல்படும் தீவிரவாத அமைப்புகளுக்கு பயிற்சிகள், நிதியுதவிகள் வழங்கி ஆதரவு அளிக்கவே பயன்படுத்தி வருவதாக பாகிஸ்தான் மீது அவர் கடுமையாக குற்றம்சாட்டினார்.

ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத் தலைவர் மசூத் ஆஸாத் மற்றும் மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட லக்வி ஆகியோரை மேற்கோள் காட்டிய அவர், ஐ.நா.வால் தீவிரவாதிகள் என வரையறுக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட தீவிரவாதிகளையும், தீவிரவாதத் தலைவர்களையும் சுதந்திரமாக தங்கள் தெருக்களில் வலம்வர பாகிஸ்தான் துணைநிற்பதாக சாடினார். மேலும், பாகிஸ்தான் அரசின் அனுமதியுடனே தங்கள் இயக்கத்துக்கான நிதிகளை தீவிரவாத அமைப்புகள் வெளிப்படையாகத் திரட்டி வருவதாகவும் அவர் குறை கூறினார்.

"தீவிரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக சர்வதேச நாடுகளிடம் பொய்யான வாக்குறுதிகளை அளித்துவிட்டு, தீவிரவாதிகளுக்கு ஆதரவாகவே பாகிஸ்தான் செயல்பட்டு வருகிறது" என்றார் அவர். இந்தியப் படையினரால் கடந்த ஜூலை 8-ம் தேதி கொல்லப்பட்ட ஹிஸ்ப்-உல்-முஜாகுதீன் தீவிரவாதி புர்ஹான் வானிக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் புகழாரம் சூட்டியதையும் அவர் கடுமையாக சாடினார். "பாகிஸ்தான் பிரதமர் இப்போதும் கூட தீவிரவாத அமைப்பின் கமாண்டர் ஒருவருக்கு ஆதரவாக பேசுவதைக் கேட்க முடிகிறது. பாகிஸ்தான் தனது மக்களுக்கு எதிரான தீவிரவாதத்தை முடுக்கிவிடுவது அங்கு ஜனநாயகமே இல்லாத நிலையைக் காட்டுகிறது.

தீவிரவாத அமைப்பினருக்கு ஆதரவு நல்கும் பாகிஸ்தான், தன் நாட்டில் வாழும் சிறுபான்மையினருக்கும் பெண்களுக்கும் அடிப்படை மனித உரிமைகளைப் பறிக்கிறது" என்றார் ஏனம் கம்பீர். காஷ்மீரில் தீவிரவாதம் ஓங்குவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது என்ற அவர், ஜம்மு - காஷ்மீர் மக்களைப் பாதுகாக்க அனைத்து வகையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றார். அமெரிக்காவில் நடந்த 9/11 தாக்குதலுக்குப் பிறகு, அல்-காய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் பல ஆண்டுகளாக பாகிஸ்தானின் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்ததையும், அங்கு அமெரிக்க படையினரால் கொல்லப்பட்டதையும் அவர் தனது பேச்சில் அழுத்தமாகக் குறிப்பிட்டார்.

யூரி தாக்குதலின் தொடர்ச்சியாக.... காஷ்மீர் - பாரமுல்லா மாவட்டத்தில் யூரி பகுதியில் அமைந்துள்ள ராணுவ முகாம் மீது, சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் தீவிரவாதிகள் 4 பேர் திடீரென ஊடுருவி தாக்குதல் நடத்தினர். இதில் 18 வீரர்கள் பலியாயினர். இதன் தொடர்ச்சியாக, யூரி ராணுவ முகாம் மீதான தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்தில் கைப்பற்றப்பட்ட ஆதாரங்களின் விவரத்தை பாகிஸ்தான் தூதரிடம் இந்தியா தெரிவித்துள்ளது. தங்கள் நாட்டுக்குள் செயல்படும் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படியும், அவற்றுக்கு ஆதரவளிப்பதை நிறுத்தும்படியும் பாகிஸ்தானை இந்தியா வலியுறுத்தி உள்ளது.

வெளியுறவுச் செயலாளர் எஸ்.ஜெய்சங்கர், பாகிஸ்தான் தூதர் அப்துல் பசித்துக்கு சம்மன் அனுப்பி வரவழைத்தார். அவரிடம், பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்புகள்தான் யூரி தாக்குதலுக்குக் காரணம் என்பதைத் தெரிவித்தார்.
யூரி சம்பவம் தொடர்பாகவும் ஐ.நா. கூட்டத்தில் விரிவாக எடுத்துரைத்த ஏனம் கம்பீர், தீவிரவாதப் பிரச்சினையில் சர்வதேச அமைப்புகளிடம் ஒருவிதமாகவும், நிஜத்தில் முன்னுக்குப் பின் முரணாகவும் பாகிஸ்தான் நடந்துகொள்வதாக சரமாரியாகத் தாக்கிப் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago