முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரியோ பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் பிரதமர் மோடியை சந்தித்தார்

வியாழக்கிழமை, 22 செப்டம்பர் 2016      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி,  பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனிரோவில் நடந்த பாராலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக உயரம் தாண்டும் வீரர் மாரியப்பன் பிரதமர் மோடியை நேற்று சந்தித்தார். ரூ2 கோடி பரிசு அறிவித்த முதல்வர் ஜெயலலிதா வுக்கும் அந்த வீரர் டெல்லியில் நன்றி தெரிவித்தார்.

 பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனிரோவில் இந்த மாதம் 7ம் தேதி முதல் 18ம் தேதி வரை உலக நாடுகளின் மாற்று திறனாளி வீரர்கள் பங்கேற்ற பாராலிம்பிக் போட்டி நடந்தது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும்  இந்த பாராலிம்பிக் போட்டியில் தமிழக உயரம் தாண்டும் வீரர் மாரியப்பன் 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்று இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்தார்.  பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமை மாரியப்பனுக்கு கிடைத்தது. அவருக்கு பிரதமர் மோடி தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள். மேலும் தமிழக அரசு சார்பில் ரூ 2கோடி அளிப்பதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

 மத்திய அரசு ரூ 75லட்சம், மகேந்திரா நிறுவனம் கார் மற்றும் ரூ 10 லட்சம் என அவருக்கு பரிசுகள் குவிந்தன. மாரியப்பன் தங்கப்பதக்கம் வென்றதை தொடர்ந்து, பாராலிம்பிக் நிறைவு விழாவில் தேசிய கொடியை ஏந்தி வரும் நமது தமிழக வீரர் மாரியப்பனுக்கு கிடைத்தது.  ரியோ பாராலிம்பிக் போட்டியில்  ஈட்டி எறிதலில் இந்திய வீரர் தேவேந்திர ஜஜாரியா தங்கப்பதக்கமும், உயரம் தாண்டுதல் போட்டியில் வருண் சிங் வெண்கலப்பதக்கமும் குண்டு எறிதலில் தீபா மாலிக் வெள்ளி பதக்கமும்  வென்று  இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார்கள்.

 மாரியப்பன் மற்றும் இதர இந்திய வீரர்கள் நேற்று காலை டெல்லி திரும்பினர்.அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் விமான நிலையத்திற்கு நேரில் வந்து வீரர்களை வரவேற்றார்.

பின்னர் தமிழக வீரர் மாரியப்பன் நேற்று காலை பிரதமர் மோடியை சந்தித்து ரியோ பாரா லிம்பிக் போட்டியில் வென்ற தங்கப்பதக்கத்தை காட்டினார். அவருக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்தினை தெரிவித்தார்.பின்னர் அவர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா ரூ 2கோடி பரிசு அறிவித்து இருப்பதற்கு தனது உளமார்ந்த நன்றியை தெரிவிப்பதாகவும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்