முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்கர் விருது போட்டியில் தமிழ் படம் "விசாரணை"

வியாழக்கிழமை, 22 செப்டம்பர் 2016      சினிமா
Image Unavailable

புதுடெல்லி : சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது பிரிவு போட்டிக்கு, இந்தியாவில் இருந்து அதிகாரபூர்வமாக 'விசாரணை' தமிழ் படம் தெரிவு செய்யப்பட்டு அனுப்பப்படுகிறது.

தினேஷ், சமுத்திரக்கனி, ஆனந்தி உள்ளிட்ட பலர் நடிக்க, வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான படம் 'விசாரணை'. தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்த இப்படத்தை லைக்கா நிறுவனம் வெளியிட்டது. பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட இப்படம் 3 தேசிய விருதுகளையும் கைப்பற்றியுள்ளது. சிறந்த தமிழ் படம், சிறந்த எடிட்டிங் மற்றும் சிறந்த உறுதுணை நடிகர் என 3 தேசிய விருதுகளை இப்படம் கைப்பற்றியது. இந்தியத் திரைப்பட கூட்டமைப்பின் தலைவர் கேத்தன் மேத்தா, இந்த ஆண்டுக்கான சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது பிரிவு போட்டிக்கு, இந்தியாவில் இருந்து 'விசாரணை' தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்படுவதாக அறிவித்துள்ளார். இந்திய மொழிகளில் வெளியான 29 படங்கள் அடங்கிய தெரிவுப் பட்டியலில் இருந்து 'விசாரணை' படம் இறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

'லாக்கப்' என்ற நாவலை மையமாக வைத்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான 'விசாரணை'. இப்படத்தின் பணிகளை முடித்து பல்வேறு உலகத் திரைப்பட விழாக்களுக்கு அனுப்பினார்கள். முதலில் வெனிஸ் திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டது. அவ்விழாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ் படம் 'விசாரணை'. இந்தி திரையுலகின் முன்னணி இயக்குநர் அனுராக் கஷ்யாப் இப்படத்தைப் பார்த்து வியந்துவிட்டதாக குறிப்பிட்டு இருந்தார். அதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட இப்படம் தணிக்கை அதிகாரிகளால் 'யு/ஏ' சான்றிதழுடன் பிப்ரவரி 5ம் தேதி வெளியானது.

ரஜினி, கமல் உள்ளிட்ட தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரும் இப்படத்தைப் பாராட்டினார்கள். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது இந்தியாவில் இருந்து ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு இருப்பதால், 'விசாரணை' படக்குழுவினருக்கு மேலும் ஒரு மகுடம் சூடியிருக்கிறது. இதற்கு முன்பாக தமிழ் படங்களில் இருந்து 'ஹேராம்' திரைப்படம், ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து 16 வருடங்கள் கழித்து ஒரு தமிழ் படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்