முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிராமப்புற திருக்கோயில்களில் திருப்பணிக்கான நிதி உதவியை ரூ.1 லட்சமாக உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

வெள்ளிக்கிழமை, 23 செப்டம்பர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, கிராமப்புற திருக்கோயில்களின் திருப்பணி மற்றும் பழுதுபார்க்கும் பணிக்கு திருக்கோயில் ஒன்றுக்கு வழங்கப்பட்டு வரும்  நிதி உதவித் தொகையினை 50,000 ரூபாயிலிருந்து ஒரு லட்சம் ரூபாயாக  உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-

திருக்கோயில்கள் நமது பண்பாட்டையும் நாகரீகத்தையும் உலகத்திற்கு எடுத்து இயம்பும் சின்னங்களாக விளங்குகிறது. திருக்கோயில்கள் மக்களுக்கு மன அமைதியையும், மன நிறைவையும் அளிக்கின்றன. இத்திருக்கோயில்கள், ஆன்மீகச் சிந்தனையையும், அற உணர்வினையும் சமுதாயத்திற்கு வழங்குவதுடன் ஒழுக்க நெறியையும் கற்றுத் தருகின்றன. முதல்வர்  ஜெயலலிதா தலைமையிலான அரசு,  திருக்கோயில்களுக்கு வருகைத் தரும் பக்தர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அண்மையில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தலின் போது கிராமப்புற திருக்கோயில்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் அமைந்துள்ள திருக்கோயில்கள் ஆகியவற்றின் திருப்பணிக்கு 25,000  ரூபாயிலிருந்து 50,000 ரூபாயாக உயர்த்தி நிதி உதவி தற்போது வழங்கப்படுகிறது. இது ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்ற வாக்குறுதியை தேர்தல் அறிக்கையில் முதல்வர்  ஜெயலலிதா அளித்திருந்தார். இந்தத் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கிராமப்புற பகுதியிலுள்ள திருக்கோயில்களின் திருப்பணி மற்றும் பழுதுபார்க்கும் பணிக்கு கிராமப்புற திருக்கோயில் திருப்பணி திட்டத்தின் கீழ் திருக்கோயில் ஒன்றுக்கு வழங்கப்பட்டு வரும்  நிதி உதவித் தொகையினை 50,000 ரூபாயிலிருந்து ஒரு லட்சம் ரூபாயாக  உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  இத்திட்டத்திற்கான செலவினை நிதிவசதி மிக்க பிற திருக்கோயில்களின் உபரி நிதியிருந்து மேற்கொள்வதற்கு இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு அனுமதி வழங்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதேபோன்று, இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இல்லாத ஆதிதிராவிடர்  மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதிகளிலுள்ள திருக்கோயில்களின் திருப்பணி மற்றும் பழுது பார்க்கும் பணிக்கு  திருக்கோயில் ஒன்றுக்கு வழங்கப்பட்டு வரும் நிதியுதவியினை 50,000 ரூபாயிலிருந்து ஒரு லட்சம் ரூபாயாக  உயர்த்தி வழங்கிட முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். இதற்கென ஏற்படும் செலவினை நிதிவசதி மிக்க பிற திருக்கோயில்களின் உபரி நிதியிலிருந்து மேற்கொள்வதற்கு இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு அனுமதி வழங்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்