முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

6 மாநகராட்சி மேயர் பதவிக்கு பெண்கள்

சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, தமிழகத்தில் உள்ள 12 மாநகராட்சி மேயர் பதவியில், மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, வேலூர், திண்டுக்கல் ஆகிய 6 மாநகராட்சி மேயர் பதவியை பெண்களுக்கு ஒதுக்கி அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசும் மாநில தேர்தல் ஆணையமும் மும்முரமாகச் செய்து வருகின்றன. தேர்தல் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. உள்ளாட்சி பதவி இடங்களை சாதி மற்றும் பாலின அடிப்படையில் ஒதுக்கீடு செய்து, அரசு அறிவிப்பு வெளியிட்டு வருகிறது.

இந்த தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்படுகிறது. அதன்படி தமிழகத்தில் உள்ள 12 மாநகராட்சி மேயர் பதவியிடங்களில் 6 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தமிழக அரசிதழில் வெளியாகியுள்ள, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மைச் செயலாளர் கே.பணீந்திர ரெட்டியின் உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது;-

தமிழகத்தில் உள்ள மாநகராட்சியின் மேயர் பதவியில், பெண்கள் மற்றும் எஸ்.சி. இனத்தவர் ஆகியோருக்கான இடஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படுகிறது. அதன்படி, வேலூர் மாநகராட்சி மேயர் பதவி எஸ்.சி. பெண்களுக்கு ஒதுக்கப்படுகிறது. தூத்துக்குடி மாநகராட்சியின் மேயர் பதவி, எஸ்.சி. (பொது) பிரிவினருக்கு ஒதுக்கப்படுகிறது.

திருச்சி, திருநெல்வேலி, திண்டுக்கல், மதுரை, கோவை ஆகிய மாநகராட்சி மேயர் பதவிகள், பெண்களுக்கு (பொது) ஒதுக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் மீதமுள்ள சென்னை, சேலம், ஈரோடு, திருப்பூர், தஞ்சாவூர் ஆகிய 5 மாநகராட்சிகள் பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.   சென்னை மாநகராட்சியில் தற்போது 200 வார்டுகள் உள்ளன. இவற்றில் 16 வார்டுகள் எஸ்.சி. (பொது), 16 வார்டுகள் எஸ்.சி. (பெண்), 92 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்படுகிறது. சென்னை மாநகராட்சி கமிஷனர் டி.கார்த்திகேயன் பிறப்பித்துள்ள இதுதொடர்பான உத்தரவு, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ள இந்த 124 வார்டுகள் தவிர மீதமுள்ள 76 வார்டுகள் பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்