முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெள்ளத்தில் மிதக்கிறது ஐதராபாத் : 5 நாள் மழை தொடரும் என எச்சரிக்கை

சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2016      இந்தியா
Image Unavailable

ஐதராபாத்  - ஐதராபாத்தில் கடந்த சில நாட்களாக கொட்டி தீர்த்து வரும் கனமழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் 5 நாட்களுக்கு ஐதராபாத்தில் மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக ஐதராபாத்தில் கனமழை பெய்து வருகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு முதல் விடிய விடிய மழை கொட்டி வரும் மழையால் தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. பிரதான சாலைகளிலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் பெய்த பெருமழை வெள்ளம் போல ஐதராபாத்தை சூறையாடிவருகிறது மழை வெள்ளம். ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்துவரும் கனமழை காரணமாக வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பு குழுவினர் மீட்டு வருகின்றனர்.

ஐதராபாத் நகரம் உள்பட தெலங்கானா மாநிலத்தின் சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 20ம் தேதி மாலை பெய்யத்தொடங்கிய மழையால் ஐதராபாத் நகரம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.ஆந்திராவில் பெய்துவரும் கனமழையால், பல இடங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. குண்டூரில் குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. மேலும் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். சில பகுதிகளில் வாகனங்கள் நீரில் மூழ்கியுள்ளன. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்களை மீட்கும் நடவடிக்கையில், மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

முசாபேட்டை, நிஜாம்பேட்டை, மியாசர், ஷாபூர் நகர், பேகம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளில் மழை நீர் புகுந்தது. முதல் தளம் வரை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் வெளியேற முடியாமல் தவித்தனர். இந்நிலையில், ஐதராபாத் பெகும்பேட்டில் உள்ள கண்பார்வையற்றோர் பள்ளிக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனையடுத்து அப்பள்ளி மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

முக்கிய ஏரிகளில் அபாயக்கட்டத்தை தாண்டி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது.

கனமழையைத் தொடர்ந்து ஐதராபாத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள், அலுவலங்களும் மூடப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கும்படியும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முடுக்கிவிடும்படியும் மாவட்ட நிர்வாகத்துக்கு மாநில முதல்வர் சந்திரசேகரராவ் உத்தரவிட்டுள்ளார்.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. மீட்புப் பணிகளில் ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதே இடத்தில் புதிதாக மற்றொரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஐதராபாத்தை உள்ளடக்கிய தெலுங்கானாவின் பிற பகுதிகளிலும் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வெள்ளம் பாதித்த பகுதிகளில் வசிக்கும் 6000 குடும்பத்தினர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் மேலும் பலர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மழையால் நோய்கள் பரவுவதை தடுக்கும் பணிகளிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்