முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில், மேக்சிஸ் நிறுவன அதிபர் அனந்தகிருஷ்ணன் உட்பட இருவருக்கு பிடிவாரண்ட்

சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில், மேக்சிஸ் நிறுவன அதிபர் அனந்தகிருஷ்ணனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கில் தங்களை கைது செய்யாமல் இருக்க, மாறன் சகோதரர்கள் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை நீதிமன்றம் அடுத்த மாதம் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

தி.மு.கவைச் சேர்ந்த தயாநிதிமாறன், மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது, ஏர்செல் நிறுவன அதிபர் சிவசங்கரனை மிரட்டி, அந்நிறுவனப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திற்கு வலுக்கட்டாயமாக விற்பனை செய்ய வைத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.  மேக்சிஸ் உள்ளிட்ட  நிறுவனங்கள் மூலம் சன் குழுமத்தில் ரூ.742.58 கோடி முதலீடு என்ற வகையில் ஆதாயம் அடைந்ததாக அமலாக்கப்பிரிவு குற்றம் சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக சி.பி.ஐ. மற்றும் மத்திய அமலாக்கப்பிரிவு சார்பில் புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டு, தனித்தனியாக வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள், டெல்லி பாட்டியாலா ஹவுஸ் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன. இவ்விரு வழக்குகளிலும் தனித்தனியே குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மத்திய அமலாக்கப்பிரிவு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தயாநிதிமாறன், கலாநிதிமாறன், கலாநிதிமாறனின் மனைவி காவேரி உட்பட 6 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஏர்செல் மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக, சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவு தொடர்ந்துள்ள 2 வழக்குகளையும், 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்ககூடாது என தயாநிதிமாறன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஏற்கெனவே தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், ஏர்செல் - மேக்சிஸ் முறைகேடு தொடர்பான வழக்கின் விசாரணை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி திரு.ஓ.பி.சைனி முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்தவழக்கில் முக்கிய நபரான மேக்சிஸ் நிறுவன அதிபர் அனந்தகிருஷ்ணன் மற்றும் அந்நிறுவனத்தின் மற்றொரு அதிகாரிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.  மேலும், இவ்வழக்கில் தங்களை கைது செய்யாமல் இருக்க தயாநிதிமாறன், கலாநிதிமாறன் அவரது மனைவி காவேரி உள்ளிட்டோர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை அடுத்த மாதம் 18-ம் தேதி நடைபெறும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்