முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

197 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது: 500-வது டெஸ்டில் வென்று இந்திய அணி வரலாறு சாதனை

திங்கட்கிழமை, 26 செப்டம்பர் 2016      விளையாட்டு
Image Unavailable

கான்பூர் - கான்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 197 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. இந்த வெற்றி மூலம்  500-வது டெஸ்ட் போட்டியில் வென்று இந்திய அணி வரலாறு சாதனை படைத்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நடந்த இந்தியா- நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் 197 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட இத்தொடரில் இந்தியா 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் 37 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 200 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்தார்.

கான்பூரில் நடந்த 500-வது டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 318 ரன்களும், நியூசிலாந்து 262 ரன்களும் எடுத்தன. 56 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி2-வது இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 377 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு 434 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 4-வது நாள் முடிவில் நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 37 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 93 ரன்களுடன் தத்தளித்துக் கொண்டிருந்தது. லுக் ரோஞ்ச் 38 ரன்களுடனும், விக்கெட் தடுப்பாளர் சான்ட்னெர் 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில், 5-வது மற்றும் இறுதிநாள் ஆட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. ஆரம்பத்தில் சற்று நிதானம் காட்டி  சாண்ட்னெர் -லூக் ரோஞ்ச் ஜோடி தோல்வியை தவிர்க்க போராடியது.

இந்த ஜோடியை ஜடேஜா பிரித்தார். ரோஞ்ச் 80 ரன்களில் அஷ்வினிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இவர் ஆட்டமிழந்ததும் நியூசிலாந்து அணி ஆட்டம் காண ஆரம்பித்தது. சீரான இடைவெளியில் இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து அணி விக்கெட்டுகளை பறிகொடுத்தது.  இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட் வீழ்த்திய அஸ்வின், இந்த போட்டியில் மொத்தமாக 10 விக்கெட்டுகள் வீழ்த்தினார். முகமது ஷமி 2 விக்கெட்டுகளும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இறுதியில் 87.3 ஓவர்கள் விளையாடிய நீயூசிலாந்து அணி 236 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணியை இந்தியா 197 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.  இந்த வெற்றியின் மூலம் இந்திய  அணி தனது 500 வது டெஸ்டில் வென்று வரலாறு படைத்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 50 ரன்கள் குவித்த ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் ஈடன் கார்டன் மைதானத்தில் வரும் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இது சொந்தமண்ணில் இந்திய அணி பங்கேற்கும் 250-வது டெஸ்ட் போட்டியாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்