முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதா நலமாக உள்ளார் - விரைவில் வீடு திரும்புவார் : மதுசூதனன்

திங்கட்கிழமை, 26 செப்டம்பர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : முதல்வர் ஜெயலலிதா நலமாக இருப்பதாகவும், அவர் விரைவில் வீடு திரும்புவார் என்றும் அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் தெரிவித்தார்.

தமிழக முதல்வரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த வியாழக்கிழமை இரவு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதைதொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்பல்லோ மருத்துவமனையின் சிறப்பான சிகிச்சையால் முதல்வர் ஜெயலலிதா வேகமாக குணமடைந்தார். இதையடுத்து அவர், வழக்கமான உணவுகளை உட்கொள்ள தொடங்கினார்.

நேற்று முன்தினம் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து அப்பல்லோ மருத்துவமனையின் டாக்டர்கள் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள், முதல்வர் ஜெயலலிதா வேகமாக குணமடைந்து வருகிறார் என்றும் விரைவில் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்புவார் என்றும் அவருக்கு வெளிநாட்டு சிகிச்சை அவசியமில்லை என்றும் தெரிவித்தனர்.

இதனிடையே அப்பல்லோ மருத்துவமனைக்கு தினமும் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற அ.தி.மு.க. உறுப்பினர்கள், அ.தி.மு.க. மகளிர் அணியினர் திராளாக சென்று முதல்வரின் உடல்நலம் குறித்து கேட்டறிந்து விட்டு செல்கிறார்கள். முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி தமிழகம் முழுவதும் பல்வேறு ஆலயங்களில் கட்சியினர் வழிபாடு செய்தும், தங்கதேர் இழுத்தும், யாகங்கள் நடத்தியும் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றுவிட்டு திரும்பிய அ.தி.மு.க. அவைத்தலைவர் இ.மதுசூதனன் செய்தியாளர்களிடம் பேசியபோது., முதல்வர் ஜெயலலிதா நலமாக உள்ளார். அவர் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்று தெரிவித்தார். இதேபோல் பண்ருட்டி ராமச்சந்திரனும் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில் முதல்வர் நலமாக உள்ளார். யாரும் கவலைப்படத் தேவையில்லை என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்