முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டமன்றத் தீர்மானம் எங்கள் உத்தரவை கட்டுப்படுத்தாது உத்தரவை மதிக்காத கர்நாடகத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்

செவ்வாய்க்கிழமை, 27 செப்டம்பர் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த எந்த உத்தரவையும் பின்பற்றாத கர்நாடகத்திற்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், இன்று முதல் 3 நாட்களுக்கு காவிரியில் 6 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள், கர்நாடக சட்டமன்றத்தின் தீர்மானம் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை கட்டுப்படுத்தாது என்றும் தெரிவித்தனர்.  காவிரியில் தமிழகத்திற்கு உரிய பங்கு தண்ணீரை திறந்துவிடக் கோரி தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் யு.யு.லலித், தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, வெவ்வேறு தேதிகளில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டனர்.

அதாவது, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கடந்த 5 மற்றும் 12-ம் தேதிகளில் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து கர்நாடகம் தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்தில் குறிப்பாக மாண்டியா மாவட்டத்தில் விவசாயிகள் வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகத்தில் பல இடங்களில் கன்னட அமைப்பினர் வன்முறை போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது, தமிழக வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. தமிழக சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இதற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்தது. அமைதியை நிலைநாட்ட கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டது.

இந்நிலையில், காவிரியில் வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டது. ஆனால், கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட் உத்தரவையும் மதிக்கவில்லை. தண்ணீரையும் திறந்து விடவில்லை. மேலும், தண்ணீர் திறந்துவிட முடியாத நிலையை குறிப்பிட்டு அம்மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், காவிரியில் தண்ணீர் திறந்துவிடாமல், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயல்படும் கர்நாடக அரசின் எந்த மனுவையும் விசாரிக்கக் கூடாது என்றும், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறும் கோரி தமிழக அரசு சார்பில் புதிதாக இடைக்கால மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு சார்பில், ஆஜரான வழக்கறிஞர் சேகர், சுப்ரீம் கோர்ட் உத்தரவை பின்பற்றாமல் தொடர்ந்து கர்நாடக அரசு தாமதித்து வருவதாக குறிப்பிட்டார். இதனை ஏற்றுகொண்ட நீதிபதிகள், கர்நாடக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை முதலில் கர்நாடக அரசு பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், கர்நாடக அரசின் சட்டப்பேரவை தீர்மானம் தங்களை கட்டுப்படுத்தாது என திட்டவட்டமாக தெரிவித்தனர்.

மேலும், இதுதொடர்பாக மத்திய அரசு தனது பதிலை அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதற்கு மத்திய அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி, காலஅவகாசம் கோரினார். இதனையடுத்து, இன்று முதல் 3 நாட்களுக்கு காவிரியில் 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், வழக்கின் அடுத்த விசாரணையை வரும் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது:-

மேலும், தாம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாமல் அதை எதிர்த்து கர்நாடக அரசு சட்டசபையை கூட்டியது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என்றும் சுப்ரீம்கோர்ட் கடுமையாக கண்டித்துள்ளது. காவிரியில் தமிழகத்துக்கு நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இதை ஏற்க மறுத்து கர்நாடகா, சட்டசபையை கூட்டி தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது.கர்நாடகாவின் நடவடிக்கையை சுப்ரீம்கோர்ட் தற்போது கடுமையாக கண்டித்துள்ளது. சுப்ரீம்கோர்ட்டில் நேற்றைய விசாரணையின் போது, கர்நாடகா அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது. மேலும் சுப்ரீம்கோர்ட் உத்தரவை மதிக்க முடியாது என்பது நாம் கடைபிடித்து வரும் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது.

கூட்டாட்சி தத்துவத்தின் படி மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் சுமூக உறவு இருக்க வேண்டும். மாநில அரசுகளுக்கு இடையே பிரச்சனை எழும்போது மத்திய அரசு தீர்வு காண முயற்சிக்க வேண்டும். மாநிலங்கள் தங்களுக்கு இடையே பிரச்சனை ஏற்படும் போது பேசித்தான் தீர்க்க வேண்டும். நீதிமன்றத்தை நாடுவதை குறைத்துக் கொள்ள வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுரை கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்