முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி, உள்ளாட்சித் தேர்தலுக்கான அ.தி.மு.க வேட்பாளர்கள் மனு தாக்கல்

செவ்வாய்க்கிழமை, 27 செப்டம்பர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை  - தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலையொட்டி, அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேற்று தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.  தமிழக உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதம் 17 மற்றும் 19-ம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, வேட்புமனுத்தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளிலேயே சுயேட்சைகள், சிறிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா உத்தரவுப்படி, இத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் நேற்று தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

தென்சென்னை தெற்கு மாவட்டம் பெருநகர சென்னை மாநகராட்சி 13-வது மண்டலத்தில் அடங்கிய 170-வது வார்டு முதல் 182-வது வார்டு வரையிலான உறுப்பினர் பதவிகளுக்கு, முதல்வர் ஜெயலலிதா அறிவித்த அ.தி.மு.க. வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். கழக நிர்வாகிகள் மற்றும் திரளான தொண்டர்கள் உடனிருந்தனர். சென்னை பெருநகர மாநகராட்சி மண்டலம் 9-க்கு உட்பட்ட 110, 116, 126, 121, 111, 125-வது வார்டுகளில் போட்டியிடும் அதிமுகவேட்பாளர்கள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். சென்னை மாதவரம் 3-வது மண்டல அலுவலகத்தில் 23 முதல் 33 வரையிலான வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிக்கு, 14 மற்றும் 15 வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்காமங்கலம், அகஸ்தீஸ்வரம், தக்கலை, முன்சிறை, தோவாளை, திருவட்டாறு, கிள்ளியூர், மேல்புறம் உள்ளிட்ட 9 ஒன்றியங்களில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் 11 பேர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி 17 வார்டுகளுக்கு அ.தி.மு.க. வேட்பாளர்கள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் மனுத்தாக்கல் செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி ஒன்று முதல் 4 வரையிலான வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள், அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். அம்பத்தூர் 7-வது மண்டல அலுவலகத்தில் 81-வது வார்டு முதல் 93-வது வார்டு வரை போட்டியிடும் கழக வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். நாகை மாவட்டம் நாகப்பட்டினம், செம்பனார்கோயில், வேதாரண்யம், மயிலாடுதுறை உள்ளிட்ட 17 ஒன்றியங்களில் போட்டியிடும் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 22 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். திண்டுக்கல் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்